பதிவு செய்த நாள்
28 அக்2012
00:45

புதுடில்லி:
நடப்பு ரபி பருவத்தில் (அக்., - மார்ச்), உர வகைகளுக்கான தேவை
அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களில், காலம்
தவறிய மழைப் பொழிவால், கரீப் பருவத்தில், உரத்திற்கான தேவை குறைந்தது.
மேலும், யூரியா தவிர்த்த, இதர உர வகைகளின் விலை, கடந்த ஆண்டை விட உயர்ந்து
உள்ளதால், பல விவசாயிகள், டீ.ஏ.பி., மற்றும் என்.பி.கே., ஆகிய உர வகைகளின்
பயன்பாட்டை குறைத்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு
பருவமழையை சார்ந்துள்ள பல மாநிலங்களில், மழை நன்கு பெய்யத்
துவங்கியுள்ளது.இதனால், உர பயன்பாடு அதிகரிக்கும் என, இத்துறையைச் சேர்ந்த
ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.மேலும், கரீப் பருவத்தை (ஜூலை.,-செப்.,) விட,
ரபி பருவத்தில், உரத்திற்கான தேவை நல்ல அளவில் வளர்ச்சி காணும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. ரபி பருவ சாகுபடியை முன்னிட்டு, பல பகுதிகளுக்கு,
உரங்கள் அனுப்பப்பட்டு விட்டதாக, உரத் தயாரிப்பு நிறுவனங்கள்
தெரிவித்துள்ளன.செப்டம்பருடன் முடிவடைந்த கரீப் பருவத்தில், யூரியா
விற்பனை, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 2.76 சதவீதம்
சரிவடைந்துள்ளது.இதேபோன்று, டீ.ஏ.பி., உர பயன்பாடு 18 சதவீதம் என்ற
அளவிலும், என்.பி.கே., உர விற்பனை, தேவை குறைந்ததால், மிகவும் அதிகபட்சமாக,
அதாவது, 30 சதவீத அளவிற்கும் சரிவடைந்துள்ளது. ரபி பருவத்திற்கான, உரத்
தேவை கடந்த ஆண்டைப் போன்றே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த
ரபி பருவத்தில், யூரியா உர விற்பனை 153.89 லட்சம் டன்னாக
இருந்தது.டீ.ஏ.பி., மற்றும் என்.பி.கே., உர வகைகள் விற்பனை, முறையே, 63
லட்சம் டன் மற்றும் 57.36 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
ரபி பருவத்தில், உரத் தேவை அதிகரிக்கும் என்ற
மதிப்பீட்டையடுத்து, டீ.ஏ,பி., மற்றும் என்.பி.கே., உர வகைகளின் கையிருப்பு
குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கையிருப்பு அதிகம் இருப்பதால்,
மேற்கண்ட உர வகைகளை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இறக்குமதியை, உர
நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.அதேசமயம், மேற்கண்ட உர வகைகள்
விற்பனை, அதிகரிக்கும் நிலையில், டிசம்பர் மாதம் முதற்கொண்டு, உரத்
தயாரிப்பு நிறுவனங்கள் மூலபொருட்கள் இறக்குமதிக்கு, புதிய ஒப்பந்தங்கள்
மேற்கொள்ளும் என, தெரியவந்துள்ளது.இந்நிலையில், டீ.ஏ.பி., மற்றும்
என்.பி.கே., உர வகைகளின் விலை மிகவும் உயர்ந்துள்ளதால், பல விவசாயிகள்,
இவற்றின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டுள்ளனர். அதேசமயம், மேற்கண்ட
உரங்களுக்கு பதிலாக, விவசாயிகள், யூரியா உரத்தை அதிகம் பயன்படுத்தி வருவதாக
கூறப்படுகிறது.தற்போது, சர்வதேச சந்தையில், கலப்பு உர வகைகளின் விலை,
சரிவடைந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு, மூன்று மாதங்கள் வரை டாலருக்கு
எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிந்திருந்தபோது, உர தயாரிப்பிற்கான மூலப்
பொருட்களை, இத்துறை நிறுவனங்கள், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி
இருந்தது.
இச்சூழ்நிலையில், டீ.ஏ.பி மற்றும் என்.பி.கே., உரங்களின் விலையை
குறைக்க முடியாத நிலை உள்ளதாக, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர்
தெரிவித்தார்.தற்போதைய நிலையில், யூரியா உரத்தின் விலை நிர்ணயம், மத்திய
அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு டன் யூரியா, 5,360 ரூபாயாக உள்ளது.
அதேசமயம், ஒரு டன் டீ.ஏ.பி., உரத்தின் விலை, 24 ஆயிரம் ரூபாயாக
அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, 18 ஆயிரம் ரூபாய் என்ற அளவில்
இருந்தது. ஒரு டன் என்.பி.கே., உரத்தின் விலை, 22 ஆயிரம் ரூபாய் என்ற
அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|