பதிவு செய்த நாள்
20 டிச2012
00:18

மும்பை:டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவுக்கு வரும் 28ம் தேதி, 75 வது பிறந்தநாள். தமது குழுமத்தின் விதிகளின்படி, ஓய்வு பெறும் டாட்டாவின் இடத்தை நிரப்ப, டாட்டா சன்ஸ் துணை தலைவர் சைரஸ் பி. மிஸ்த்ரி வர உள்ளார்.உப்பு முதல் உருக்கு வரை, தேயிலை முதல் தொலைத் தொடர்பு சேவை வரை கால்பதித்துள்ள டாட்டா குழுமம், விட்டு வைத்த துறைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
சமூக நலன்:மது, புகையிலை போன்ற தொழில்களில் கோடி கோடியாக வருவாய் ஈட்டும் வல்லமை இருந்தும், இது போன்ற, சமூக நலனை பாதிக்கும் துறைகளில் இறங்குவ தில்லை என்பது, டாட்டா குழுமத்தின் சித்தாந்தம்.தற்போது, ஆண்டுக்கு 5.50 லட்சம் கோடி ரூபாயை, விற்றுமுதலாக ஈட்டி வரும் இக்குழுமம், இதை, வரும் 2021ம் ஆண்டில், 25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த மிகப் பெரிய பொறுப்பை, 44 வயதான சைரஸ் மிஸ்த்ரி, நிறைவேற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் பொறியியல் படிப்பும், லண்டன் வணிக கல்லூரியில் உயர்கல்வியும், குடும்ப நிறுவனமான சபூர்ஜி பலோன்ஜியை திறம்பட நிர்வகித்த அனுபவமும் இவருக்கு உண்டு.இவர், டாட்டா குழுமத்தின் பாரம்பரிய பெருமையை மேலும் உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவரது தந்தை நிர்வகித்து வரும், சபூர்ஜி பலோன்ஜி நிறுவனம், டாட்டா சன்ஸ் நிறுவனத்தில், 18.5 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டு உள்ளது. டாட்டா சன்ஸ் நிறுவன நிர்வாக குழுவில், சைரஸ் மிஸ்திரி, கடந்த 2006ம் ஆண்டு முதல், இயக்குனர் பொறுப்பு வகித்து வந்தார். சென்ற 2011ம் ஆண்டு நவம்பரில், துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.
நிர்வாக திறமை:இவரது, சீரிய நிர்வாகத் திறமையும், உடனுக்குடன் முடிவெடுக்கும் ஆற்றலும், ரத்தன் டாட்டாவை பெரிதும் கவர்ந்திடவே, தற்போது, டாட்டா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.டாட்டா குடும்பத்தின், மூன்றாம் தலைமுறையை சேர்ந்த ரத்தன் டாட்டா, டாட்டா குழுமத்தின் கவுரவ தலைவராக செயல்படுவார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக, அயராமல் உழைத்த ரத்தன் டாட்டா, இனி டாட்டா குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். அதே சமயம், யாருக்காவது தமது ஆலோசனையும், வழிகாட்டுதலும் தேவைப்பட்டால், தாராளமாக வழங்குவேன் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|