பதிவு செய்த நாள்
21 டிச2012
00:24

பரமக்குடி:மின் தடையால் பரமக்குடியில் இரண்டு மாதங்களாக, 5 கோடி ரூபாய்க்கு மேல், கைத்தறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கூட்டுறவு சங்கங்கள் காசுக்கடனை திரும்பச் செலுத்தும் அபாயம் ஏற்பட்டு, நெசவாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.மின் வெட்டு:பரமக்குடியில், அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்துள்ளது. காலை 8 - 10, மாலை 4 - 6, இரவு 7 - 8 வரை, 5 மணி நேரம் மட்டுமே மின் சப்ளை உள்ளது.
இதற்கு மத்தியில் குறைந்த அழுத்தம், அடிக்கடி டிரான்ஸ்பார்மர் பழுது போன்ற காரணங்களால், கூடுதல் நேரம் மின்வெட்டு செய்யப் படுகிறது.பரமக்குடியில், 84 கூட்டுறவு சங்கங்கள் மூலம், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர், வீடுகளில் நெசவுக்கூடங்கள் அமைத்து, நெய்து வருகின்றனர்.ஒவ்வொரு சங்கத்திலும் சராசரியாக, தினமும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு, உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்நிலையில், மின் தடையால், ஒட்டு மொத்த சங்கங்களில், தினமும், 4 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நெசவாளர்களை பொறுத்தவரை, 25 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாயை இழந்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிகள்:ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம், ஆண்டுதோறும், உற்பத்தியைப் பொறுத்து காசுக்கடன் வழங்கப்படுகிறது. 2010 - 11ல் ஒரு சங்கம், ஒரு கோடிக்கு உற்பத்தி செய்திருந்தால், 50 லட்சம் ரூபாய்க்கு, காசுக்கடன் வழங்கப்படும்.ஆனால், 2011 - 12ல் அதே ஒரு கோடி ரூபாய்க்கு உற்பத்தியை காண்பித்தால் மட்டுமே, மீண்டும் அதே காசுக்கடனை பெற்று சங்கத்தை இயக்க முடியும். உற்பத்தி குறைந்தால், காசுக்கடனை திரும்பச் செலுத்த நேரிடும்.
உதாரணமாக, உற்பத்தி, 70 லட்சம் ரூபாய்க்கு குறைந்தால், காசுக்கடன், 35 லட்சம் மட்டுமே கிடைக்கும். இதனால், கடந்த ஆண்டு பெற்ற தொகையில், 15 லட்சம் ரூபாயை உடனடியாக, திரும்ப செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.தள்ளுபடி:ஏற்கனவே தனி அலுவலர் சம்பளம், தள்ளுபடி பாக்கியால், தள்ளாடி வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு, இது மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்து உள்ளது. ஒட்டு மொத்தமாக முடங்கும் அபாய நிலையில் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
இதுகுறித்து, பரமக்குடி - எமனேஸ்வரம் கைத்தறி நெசவாளர்கள் சங்க அமைப்பாளர் குப்புசாமி கூறியதாவது:2007க்குப் பின் துவக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு, தள்ளுபடி பாக்கி தரப்படவில்லை. தள்ளுபடியும் ரூபாய்க்கு, 20 காசுகளே கொடுக்கின்றனர்.விழா காலங்களில் 30 காசு வழங்கப்படுகிறது. ஏற்கனவே வங்கியில் பெற்ற காசுக் கடனுக்கு, வட்டி செலுத்த முடியாமல் பல சங்கங்கள் உள்ளன.
இந்நிலையில் கடும் மின்வெட்டால், உற்பத்தி இன்றி காசுக் கடனை ஒட்டு மொத்தமாக திரும்பச் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், ஒவ்வொரு சங்கமும் செயல்பட முடியாமல், மூடு விழா காணும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|