பதிவு செய்த நாள்
01 ஏப்2013
00:33

புதுடில்லி:வரும் 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 10 சதவீதம் வளர்ச்சி காணும் என, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.இஸ்ரேல், தென் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற புதிய சந்தைகளில், இந்திய ஆயத்த ஆடைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.இது தவிர, அமெரிக்காவிற்கான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியும், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இது போன்ற காரணங்களால், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, வரும் நிதியாண்டில், 10 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே விரைவில், தாராள வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது. அதன் பின்னர், சர்வதேச போட்டியை சமாளிக்கும் வகையில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, மேலும், சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, வங்கதேசத்திற்கு கடும் போட்டி நாடாக இந்தியா உருவெடுக்கும் என, ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் காணப்பட்ட, 1,360 கோடி டாலர் (73,440 கோடி ரூபாய்) என்ற அளவிலேயே இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, 9 மாத காலத்தில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 48,494 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 45,505 கோடி ரூபாயாக இருந்தது.இதே போன்று, ஜவுளி மற்றும் நூலிழை ஏற்றுமதியிலும் விறுவிறுப்பு தென்படுகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த ஜவுளி ஏற்றுமதி, 3,800 கோடி டாலராக (2.09 லட்சம் கோடி ரூபாய்) இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது, இலக்கு அளவான, 4,000 கோடி டாலரை காட்டிலும், குறைவு என, இந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பு (சி.ஐ.டி.ஐ.,) தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|