பதிவு செய்த நாள்
01 ஏப்2013
00:36

மும்பை:பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு வெளியீட்டில், எல்.ஐ.சி., நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு, ஒட்டு மொத்த அளவில், 2.8 சதவீதம் உயர்ந்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், இதுவரையிலுமாக, பொதுத் துறையைச் சேர்ந்த, எட்டு நிறுவனங்களின், பங்கு வெளியீடுகளில், ஆயில் இந்தியா தவிர்த்த, ஏழு நிறுவனங்களில், எல்.ஐ.சி., நிறுவனம் முதலீடு மேற்கொண்டுள்ளது.
இந்துஸ்தான் காப்பர்:இதில், ஓ.என்.ஜி.சி., தவிர, ஏனைய நிறுவனங்களில், எல்.ஐ.சி., நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு சரிவடைந்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த, இந்துஸ்தான் காப்பர் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 807.90 கோடி ரூபாயை திரட்டி கொண்டது. இதில், எல்.ஐ.சி., நிறுவனம், 352.30 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது. இதன் மதிப்பு தற்போது, 40.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 209.30 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இதே போன்று, நேஷனல் அலுமினியம், பங்கு வெளியீட்டின் மூலம், 628.60 கோடியை திரட்டி கொண்டது. இதில், எல்.ஐ.சி., நிறுவனம், 210.20 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது.
ஆனால், இதன் மதிப்பு தற்போது, 17 சதவீதம் சரிவடைந்து, 174.50 கோடியாக குறைந்துள்ளது.என்.எம்.டீ.சி., நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 5,979.80 கோடி ரூபாயை திரட்டி கொண்டது. இதில், எல்.ஐ.சி., நிறுவனம், 280.60 கோடியை முதலீடு செய்திருந்தது. ஆனால், இதன் மதிப்பு தற்போது, 9.7 சதவீதம் குறைந்து, 253.40 கோடியாக சரிவடைந்துள்ளது.ஓ.என்.ஜி.சி., நிறுவனம்:மற்றொரு பொதுத் துறை நிறுவனமான, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 12,352.80 கோடியை திரட்டி கொண்டது. இந்நிறுவனத்தின் பங்குகளில், எல்.ஐ.சி., நிறுவனம், 11,401.90 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது. கணக்கீட்டு காலத்தில், இந்நிறுவனத்தின் பங்கின் விலை உயர்ந்ததையடுத்து, எல்.ஐ.சி., நிறுவனம், இந்நிறுவனத்தில் மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு, 6.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 12,117 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், என்.டி.பி.சி., நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 11,469.40 கோடியை திரட்டி கொண்டது.
இதில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு முதலீடு, 1,761.70 கோடியாகும். இதன் மதிப்பு தற்போது, 3.2 சதவீதம் குறைந்து, 1,705.40 கோடியாக சரிவடைந்துள்ளது.செயில் நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,514.50 கோடியை திரட்டி கொண்டது. இதில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு முதலீடு, 1,068.80 கோடியாகும். ஆனால், இந்த முதலீட்டு மதிப்பு, தற்போது, 0.2 சதவீதம் குறைந்து, 1,066.20 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.ஆர்.சி.எப்., நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 310.30 கோடியை திரட்டி கொண்டது. இந்நிறுவனத்தின் பங்குகளை, எல்.ஐ.சி., நிறுவனம், 142.30 கோடிக்கு வாங்கியது. ஆனால், தற்போது, இதன் மதிப்பு, 19.3 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 114.80 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
ஆயில் இந்தியா:ஆயில் இந்தியா நிறுவனம், பங்கு வெளியீடு மூலம், 3,145 கோடி ரூபாயை திரட்டி கொண்டது. ஆனால், எல்.ஐ.சி., நிறுவனம், இதன் பங்கு வெளியீட்டில் முதலீடு எதுவும் மேற்கொள்ளவில்லை.ஒட்டு மொத்த அளவில், கணக்கீட்டு காலத்தில், மேற்கண்ட பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்துமாக, பங்கு வெளியீடுகளின் வாயிலாக, 36,208.30 கோடி ரூபாயை திரட்டி கொண்டன. மேற்கண்ட அனைத்து நிறுவனங்களிலுமாக, எல்.ஐ.சி., நிறுவனம், மேற்கொண்ட முதலீடு, 15,217.80 கோடி ரூபாயாகும்.இவற்றின் தற்போதைய மதிப்பு, 15,640.60 கோடியாகும். ஆக, ஒட்டு மொத்த அளவில், மேற்கண்ட பொதுத் துறை நிறுவனங்களில், எல்.ஐ., நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு, 2.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|