பதிவு செய்த நாள்
29 மே2013
01:06

புதுடில்லி:பொதுத் துறையை சேர்ந்த, நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன் (என்.எச்.பி.சி.,) நிறுவனத்தில், 11.36 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 2,400 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த பங்கு வெளியீடு தொடர்பான பணிகளை, மத்திய நிதி அமைச்சகம் துவக்கியுள்ளது.
இதற்காக, பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் வர்த்தக வங்கிகளுக்கான, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.புனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள என்.எச்.பி.சி., நிறுவனத்தில், மத்திய அரசு, 86.36 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. இதில், 11.36 சதவீதம், அதாவது, 120 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஒரு பங்கு தற்போது, 20 ரூபாய் என்ற அளவில் கைமாறிக் கொண்டுள்ளது. இதே விலையில், பங்கு வெளியீட்டை மேற்கொண்டால் கூட, 2,400 கோடி ரூபாய் திரட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோரிக்கை அடிப்படையிலான இந்த பங்கு வெளியீட்டில், 10 சதவீதம், என்.எச்.பி.சி., நிறுவன ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும். பங்கு வெளியீட்டு விலையை விட, 5 சதவீதம் குறைந்த தொகைக்கு அவர்களுக்கு பங்குகள் வழங்கப்படும்.சென்ற 2011-12ம் நிதியாண்டு நிலவரப்படி, என்.எச்.பி.சி., நிறுவனத்தின், அளிக்கப்பட்ட பங்கு மூலதனம், 12,301 கோடி ரூபாயாக இருந்தது.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை விற்பனை செய்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.சென்ற நிதியாண்டில், ஆயில் இந்தியா, என்.டி.பி.சி., என்.எம்.டீ.சி., இந்துஸ்தான் காப்பர் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை விற்பனை செய்து, 23,920 கோடி ரூபாயை மத்திய அரசு திரட்டிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|