பதிவு செய்த நாள்
17 செப்2013
00:27

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 16 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், ஏற்றுமதி, 11.6 சதவீதம் என்ற அளவிலும், இது, ஆகஸ்ட் மாதத்தில், 13 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டிருந்தது.தற்போதைய நிலையில், கைவசம் உள்ள ஏற்றுமதி ஆர்டர்களை வைத்து பார்க்கையில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நான்கு மாத காலத்தில், ஏற்றுமதி, 24 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காண வாய்ப்புள்ளது.
வர்த்தக பற்றாக்குறை:இந்நிலையில், டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, சரிவடைந்துள்ளதால், அது, ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஏற்றுமதி அதிகரிக்கும் அதே நேரத்தில், இறக்குமதி குறையும் நிலையில், வர்த்தக பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஏற்றுமதியை விட, இறக்குமதி குறைந்ததால், வர்த்தக பற்றாக்குறை, 2,000 கோடி டாலரிலிருந்து, 1,200 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இச்சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. இதனால், நம்நாட்டிலிருந்து, மேற்கண்ட நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி, அதிகரிக்க வாய்ப்புள்ளது என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நடப்பு 2013ம் ஆண்டில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 12,100 கோடி டாலராக அதிகரிக்கும் என, இந்த கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. அதேசமயம், கடந்தாண்டின் இதே காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 9,760 கோடி டாலர் என்ற அளவில் தான் இருந்தது.
மத்திய வர்த்தக அமைச்சகம், இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பிடம் இருந்து, டிசம்பர் வரையிலுமாக, கைவசம் உள்ள ஆர்டர்கள் குறித்து கேட்டறிந்து உள்ளது. இதன் அடிப்படையில்தான், நடப்பு முழு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா:நடப்பு முழு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 33,500 கோடி டாலராக அதிகரிக்க வாய்ப்புள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பொதுவாக, செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான நான்கு மாத காலத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, இந்தியாவிலிருந்து, அதிகளவில் ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில், மேற்கண்ட நாடுகளின் பங்களிப்பு, 30 சதவீதம் என்ற அளவில் உள்ளது.கடந்த 2012ம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மந்த நிலையால், இந்நாடுகளுக்கான ஏற்றுமதி, 4.7 சதவீதம் சரிவுஅடைந்தது.
வேளாண் பொருட்கள்: நடப்பாண்டில், ஜூன் மாதம் வரையிலான காலாண்டில், அமெரிக்காவின் பொருளாதாரம், முதல் மதிப்பீடான, 1.7 சதவீதத்தை விட, 2.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், நடப்பு 2013ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 0.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.நடப்பாண்டில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நான்கு மாத காலத்தில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 20 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அதே போன்று, கணக்கீட்டு காலத்தில், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி (20 சதவீதம்), தோல் பொருட்கள் (26.6 சதவீதம்), நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (24 சதவீதம்), விளையாட்டு சாதனங்கள் (19.1 சதவீதம்) ரசாயனங்கள் (22.8 சதவீதம்), பொறியியல் சாதனங்கள்(22.1 சதவீதம்), மின்னணு சாதனங்கள் ( 20 சதவீதம்), ஜவுளி (24.6 சதவீதம்), கைவினை பொருட்கள் (25.50 சதவீதம்), பெட்ரோலியப் பொருட்கள் (11.8 சதவீதம்), தரைவிரிப்புகள் (22.8 சதவீதம்) ஆகியவற்றின் ஏற்றுமதியும் சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், இறக்குமதியும் குறையும் நிலையில், வர்த்தக பற்றாக்குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் வெகுவாகக் குறையும்.
ரூபாய்மதிப்பு:கடந்த 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 19,600 கோடி டாலராக அதிகரித்திருந்தது. இதனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை , 4.8 சதவீதமாக மிகவும் அதிகரித்தது. இதன் காரணமாகவே, கடந்த ஒரு சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு மிகவும் சரிவடைந்து போனது.ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறையும் பட்சத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைவதுடன், ரூபாய்மதிப்பும் மேலும் வலுவடையும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|