பதிவு செய்த நாள்
22 நவ2013
01:11

புதுடில்லி,: சென்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின் கனிமங்கள் உற்பத்தி மதிப்பு, 16,120 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் இதே மாதத்தில், இதன் உற்பத்தி மதிப்பு, 14,785 கோடி ரூபாயாக இருந்தது.
நிலக்கரி:மதிப்பீட்டு மாதத்தில், நிலக்கரி உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து, நாட்டின் கனிமங்கள் உற்பத்தி மதிப்பு, 9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கீட்டு மாதத்தில், கச்சா பெட்ரோலியத்தின் உற்பத்தி மதிப்பு, மிகவும் அதிகபட்சமாக, 5,625 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.நடப்பாண்டு செப்டம்பரில், நிலக்கரி உற்பத்தி, 406 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 361 லட்சம் டன்னாக இருந்தது. மேலும், இதன் உற்பத்தி மதிப்பும், 4,137 கோடி ரூபாயிலிருந்து, 4,939 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.அதேசமயம், இதே காலத்தில், இரும்பு தாது உற்பத்தி மதிப்பு, 2,321 கோடியிலிருந்து, 2,198 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
இருப்பினும், இதன் அளவின் அடிப்படையில் இதன் உற்பத்தி சற்று வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், மதிப்பீட்டு மாதத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி மதிப்பு, 1,801 கோடியாகவும், பழுப்பு நிலக்கரி உற்பத்தி மதிப்பு, 383 கோடியாகவும், சுண்ணாம்புக்கல் உற்பத்தி மதிப்பு, 355 கோடி ரூபாயாகவும் உள்ளது.
வைரம்:நாட்டின் மொத்த கனிமங்கள் உற்பத்தியில், மேற்கண்ட ஆறு கனிமங்களின் பங்களிப்பு, 95 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீட்டு மாதத்தில் , 117 கிலோ தங்கமும், 3,001 காரட் வைரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது,கடந்தாண்டு இதே மாதத்தில், முறையே, 124 கிலோ மற்றும் 2,515 காரட் என்ற அளவில் இருந்தது என, மத்திய அரசின் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|