பதிவு செய்த நாள்
27 மே2014
01:29

புதுடில்லி:முந்தைய ஐ.மு., அரசு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மானியச் சுமையை, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசுக்கு விட்டுச் சென்றுள்ளது.இது, புதிய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு, மிகப் பெரிய சவாலாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உணவு:மொத்த மானிய நிலுவையில், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, பொது வினியோக திட்டம் சார்ந்த உணவு மானியத்தின் கீழ், வழங்கப்பட வேண்டும்.இத்துடன், உர நிறுவனங்களுக்கான மானிய நிலுவை, 38 ஆயிரம் கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்கள், உற்பத்தி செலவை விட குறைவாக, அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு, உரம் விற்பனை செய்கின்றன.இதனால், அவற்றின் உற்பத்தி செலவிற்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசம், மானியமாக வழங்கப்படுகிறது.அது போன்று, பொதுத் துறையை சேர்ந்த, ஐ.ஓ.சி., எச்.பி.சி.எல்., பீ.பி.சி.எல்., ஆகிய மூன்று எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை வினியோகித்து வருகின்றன.
இந்நிறுவனங்களின் இழப்பை ஈடுசெய்யும் வகையில், மானியம் வழங்கப்படுகிறது. இந்த வகையில், முந்தைய மன்மோகன் சிங் அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.மேற்கண்ட நிலுவை மட்டுமின்றி, நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும், வரி வசூல் இலக்கை எட்டவும், அதிக அளவில் நிறுவனங்களிடம் இருந்து முன்கூட்டிய வரி பெறப்பட்டுள்ளது.இவ்வாறு கூடுதலாக பெறப்பட்ட தொகையை, வட்டியுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திரும்ப அளிக்க வேண்டிய சுமையும், நிதியமைச்சகத்தின் மீது விழுந்துஉள்ளது.
வட்டி செலவு:கடந்த நிதியாண்டின், நான்காம் காலாண்டிற்கான மானியம், நடப்பு நிதியாண்டில் தான் வழங்கப்படும் என, முந்தைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினாலும், இது புதிய அரசுக்கு, மிகப் பெரிய சுமையாகவே இருக்கும் என, பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.ஏனெனில், குறித்த காலத்தில் கிடைக்காத மானிய உதவியால், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், வங்கியில் வட்டிக்கு கடன் பெற்று, அவற்றின் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. இதனால், இந்நிறுவனங்களின் கடன், வட்டிச் செலவினம் ஆகியவை உயரும்.
மானிய நிலுவை, முன்கூட்டிய வரி வசூல் போன்றவற்றால், சென்ற நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி யில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, 4.6 சதவீதமாக உள்ளது. இதை, நடப்பு நிதியாண்டில், 4.1 சதவீதமாக குறைக்க, இடைக்கால பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.இலக்கு:நிலுவையில் உள்ள 1 லட்சம் கோடி ரூபாய் மானியம், கடந்த நிதியாண்டில், அதாவது, முந்தைய அரசு அளித்திருந்தால், நடப்பு நிதியாண்டின், நிதிப் பற்றாக்குறை இலக்கில், குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்திருக்கும் என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|