பதிவு செய்த நாள்
22 பிப்2016
09:55

ஐ.பி.ஓ., என்று குறிப்பிடப்படும் பொது பங்கு வெளியீட்டில் பங்கேற்கும் விருப்பம் இருந்தால் அஸ்பா (ASBA) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இனி, ஐ.பி.ஓ.,வில் அஸ்பா மூலம் தான் விண்ணப்பிக்க முடியும். ‘அப்ளிகேஷன்ஸ் சப்போர்டட் பை பிளாக்ட் அமவுண்ட்’ என்பதன் சுருக்கம் தான் அஸ்பா.
கடந்த 2008ம் ஆண்டு முதல் அஸ்பா முறை அமலில் இருந்தாலும், இதுவரை சில்லரை முதலீட்டாளர் அல்லாத பிரிவினருக்கே கட்டாயமாக இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் சில்லரை முதலீட்டாளர்களுக்கும் (2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்பவர்கள்)
செபி அமைப்பால் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அஸ்பா என்றால் என்ன?
அஸ்பா என்பது பொது பங்கு வெளியீடுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆன்-லைன் மூலம் பணம் செலுத்தும் முறை. குறிபிட்ட வங்கிகள் இந்த வசதியை வழங்குகின்றன. இதில் விண்ணப்பிக்கும் போது, வங்கி உங்கள் சார்பில் விண்ணப்பத்திற்கான தொகையை பிடித்தம் செய்து வைத்துக்கொண்டு, பங்குகள் ஒதுக்கப்பட்டவுடன் அதை செலுத்துகிறது. பங்குகள் ஒதுக்கப்படாவிட்டால் அந்த தொகை விண்ணப்பதாரரின் கணக்கிலேயே நீடிக்கும். இடைப்பட்ட காலத்தில் இந்த தொகையை விண்ணப்பதாரர் வேறு எதற்காகவும்
பயன்படுத்த முடியாது.
சாதகம் என்ன?
அஸ்பா முறை விண்ணப்பத்திற்கு பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது. இதுவரை பங்கு வெளியீட்டில் பங்கேற்க விரும்பும் சில்லரை முதலீட்டாளர்கள் விண்ணப்பத்துடன் காசோலை அல்லது வரைவோலை மூலம் பணம் செலுத்த வேண்டும்.
பங்கு வெளியீடு முடியும் வரை இந்த பணம் முடங்கி இருக்கும். அதோடு பங்கு வெளியீட்டில் பங்குகள் ஒதுக்கப்படாவிட்டால் அந்த தொகையை திரும்ப பெற காத்திருக்க வேண்டும். ஆனால், அஸ்பாவில் பங்கு ஒதுக்கப்பட்டால் மட்டுமே உங்கள் கணக்கில் இருந்து பணம் செலுத்தப்படும். இல்லை என்றால் அந்த பணம் உங்கள் கணக்கிலேயே நீடிக்கும். அதைவிட முக்கியமாக இடைப்பட்ட காலத்தில் பணத்திற்கான வட்டியும் கணக்கிடப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
முதலீட்டாளர், இந்த வசதியை அளிக்கும் எஸ்.சி.எஸ்.பி., எனப்படும், ‘செல்ப் சர்டிபைடு சிண்டிகேட் பாங்க்’ வகை வங்கி மூலம்
விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.
பங்கு முதலீட்டிற்கு தேவையான டிமெட் கணக்கை வேறு எந்த சேவை நிறுவனத்திடமும் வைத்திருக்கலாம். பான் கார்டு எண், வாடிக்கையாளர் ஐ.டி., விண்ணப்பிக்கும் அளவு மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.
பாதகம் உண்டா?
அஸ்பா முதலீட்டாளர்களுக்கு மிகவும் வசதியானது. ஆனால், குறிப்பிட்ட சில வங்கிகள் மட்டுமே இந்த வசதியை அளிப்பதால் அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே இதை பயன்படுத்திக்கொள்ள முடியும். அதோடு இந்த வசதியை அளிக்கும் வங்கிகளில் கூட எல்லா ஊழியர்களும் இதுபற்றி தெளிவாக அறியாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது.
இனி
அஸ்பா மூலம் மட்டுமே ஐ.பி.ஓ.,வில் விண்ணப்பிக்கலாம் என்பதால் சில்லரை முதலீட்டாளர்கள் பொது பங்கு வெளியீட்டில்
பங்கேற்பது குறையலாம் என அச்சம் நிலவியது. இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான இரண்டு பங்கு வெளியீடுகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|