பதிவு செய்த நாள்
02 மார்2016
10:36
''தங்கம் மீது விதிக்கப்பட்ட கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 35 ஆயிரம் நகை கடைகள், மூன்று நாட்கள் மூடப்படும்,'' என, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்தார்.
தங்க நகைகள் மீது தற்போது, 10 சதவீதம் சுங்க வரி; 1 சதவீதம் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில், 'தங்கம், வைர நகைகள் மீது, 1 சதவீதம் கலால் வரி விதிக்கப்படும்' என, தெரிவித்தார்.
இதனால், தங்கம் விலை சவரனுக்கு, 250 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கலால் வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் உட்பட, நாடு முழுவதும், இன்று முதல், மூன்று நாட்களுக்கு நகை கடைகளை மூட, உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: தங்கம் மீது விதிக்கப்பட்டு உள்ள புதிய கலால் வரியால், அதன் விலை உயரும். மக்கள், தங்கம் வாங்குவதை தவிர்ப்பர். இதனால், தங்க நகை தொழிலில் ஈடுபட்டு உள்ள கடை விற்பனையாளர்கள் உட்பட, 12 லட்சம் பேர் வேலை இழப்பர். எனவே, கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மார்ச், 2 முதல், மூன்று நாட்களுக்கு அனைத்து நகைக் கடைகளையும் மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 35 ஆயிரம் தங்க நகை கடைகள் மூடப்படும். இதனால், தங்கம் சார்ந்த தொழில்களில், 1,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பாதிக்கும்; அரசுக்கும், வரி வருவாய் இழப்பு ஏற்படும்.
- நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|