பதிவு செய்த நாள்
14 ஆக2016
06:09

புதுடில்லி:‘டீசல் கார்களால் தான் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து, ஆராய வேண்டும்’ என, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு, மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. சுற்றுச்சூழல் மாசு வழக்கில், டில்லியில், எட்டு மாதங்களாக, 2,000 சி.சி., மற்றும் அதற்கு மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இத்தடையை நேற்று முன்தினம் நீக்கிய சுப்ரீம் கோர்ட், ‘டீசல் கார் தயாரிப்பு நிறுவனங்கள், 1 சதவீத பசுமை வரியை செலுத்த வேண்டும்’ என, உத்தரவிட்டுள்ளது. இதை வரவேற்று இந்திய வாகன துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.விஷ்ணு மாதுார், டைரக்டர் ஜெனரல், இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு, வாகன தயாரிப்பு துறைக்கு நிம்மதி அளித்துள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் டீசல் கார்களின் பங்கு, மிகவும் குறைவு. அதனால், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கான உண்மை காரணத்தை கண்டுபிடித்து தீர்வு காண, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகர் விஸ்வநாதன், இயக்குனர், டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார்: அனைத்து விதிமுறைகளை பின்பற்றியே வாகனம் தயாரிக்கப்படுகிறது. கட்டாயத்தின் பேரில், பசுமை வரி செலுத்த முன்வந்துள்ளோம். இந்த முடிவை, சுப்ரீம் கோர்ட் முன்னதாகவே எடுத்திருந்தால், வாகன துறைக்கு, பாதிப்பு குறைவாக இருந்திருக்கும். எனினும், நீதிமன்றமும், மத்திய அரசும், இப்பிரச்னையில் தெளிவான முடிவை அறிவிக்காத வரை, இந்தியாவில் முதலீடு செய்வதில்லை என்ற எங்கள் முடிவில் மாற்றம் இருக்காது.பவன் கோயங்கா, செயல் இயக்குனர், மகிந்திரா அண்டு மகிந்திரா: சுப்ரீம் கோர்ட், டீசல் கார் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இனி, 2020, ஏப்ரலில் அமலுக்கு வரும், ‘பி.எஸ்., – 6’ சுற்றுச்சூழல் விதிமுறைகளின் படி கார்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துவோம்.
ஆர்.சி.பார்கவா, தலைவர், மாருதி சுசூகி: பாதிக்கப்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு, நிவாரணம் கிடைத்துள்ளது. 2,000 சி.சி.,க்கும் குறைவான காருக்கும் பசுமை வரி விதிக்கப்படுமா என, தெரியாது. இதுபோன்ற தீர்வையை ஒழிக்கவே மத்திய அரசு விரும்புகிறது. அனைத்து தரப்பினரும் கலந்து பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.ராகேஷ் ஸ்ரீவத்சவா, மூத்த துணை தலைவர், விற்பனை, சந்தைப்படுத்துதல், ஹுண்டாய் மோட்டார் இந்தியா: வாகன துறையில் முதலீடுகளை அதிகரிக்க, சாதகமான வரி விதிப்பு முறையும், புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையும் அவசியம்.ஜோ கிங், தலைவர், ஆடி இந்தியா: டில்லியில், டீசல் கார்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், பலர் வேலை இழந்துள்ளனர்; கார் முகவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட கால அடிப்படையில், நிலையான கொள்கையை உருவாக்குவதே வளர்ச்சிக்கு உதவும். மெர்சிடஸ் பென்ஸ்: பசுமை வரி செலுத்துவதால், தன் டீசல் கார்கள், சுற்றுச்சூழலை பாதிப்பதாக அர்த்தமில்லை என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|