பதிவு செய்த நாள்
18 செப்2016
01:41

புதுடில்லி:மத்திய அரசு, சுற்றுலா துறையை ஊக்குவிக்க, எடுத்த நடவடிக்கைகளால், இந்தாண்டு, ஜன., – ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 10 சதவீதம் அதிகரித்து, 49.22 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து மத்திய தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்திற்கு, உத்வேகம் அளிக்கும் துறைகளில் ஒன்றாக, சுற்றுலா துறை உள்ளது. இத்துறையை மேம்படுத்த பல்வேறு கொள்கை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வெளிநாட்டு பயணிகள் சுலபமாக இந்தியா வருவதற்கு, ‘இ – விசா’ நடைமுறை உதவுகிறது.
‘வியக்கத்தக்க இந்தியா – மீண்டும் கண்டு அனுபவியுங்கள்’ என்ற பிரசாரமும், அதற்கான, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதும், சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இதன் மூலம், அன்னியச் செலாவணி வருவாயும், வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்தாண்டு ஜன., – ஜூலை வரையிலான காலத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, கடந்த ஆண்டு இதே காலத்தை விட, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 11.63 சதவீதம் உயர்ந்துள்ளது. சுற்றுலா துறை வாயிலான அன்னியச் செலாவணி வருவாய், 9.5 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த, 2015–16ம் நிதியாண்டில், அன்னிய நேரடி பங்கு முதலீடு, 72 சதவீதம் அதிகரித்துள்ளது; இ – விசா வசதி, 150 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாதம், இ – விசாவில் வந்த பயணிகளின் எண்ணிக்கை, 219 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அடுத்து, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. ஜன., – ஜூலை வரை, 5.40 லட்சம் சுற்றுலா பயணிகள் இ – விசாவை பயன்படுத்தி, இந்தியா வந்துள்ளனர். இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 1.47 லட்சமாக இருந்தது. தற்போது, நாள்தோறும், சராசரியாக, 3,500 இ – விசாக்கள் வழங்கப்படுகின்றன. ஜன., – ஜூன் வரை வெளிநாடுகளைச் சேர்ந்த 96,856 நோயாளிகள், சிகிச்சைக்காக, மருத்துவ விசாவில் இந்தியா வந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், சுற்றுலா மற்றும் ஓட்டல் துறைகள், 210 கோடி டாலர், அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளன.சம்ஹி ஓட்டல்ஸ், லெமன் ட்ரீ ஓட்டல்ஸ், ஆரவெல் ஸ்டேஸ், டாடா ஸ்டார்பக்ஸ், மேக் மை டிரிப் இந்தியா உள்ளிட்ட, நிறுவனங்கள், அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|