பதிவு செய்த நாள்
10 அக்2016
04:38

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அளித்து கவர்ந்திழுத்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் தரத்தை முக்கிய அம்சமாக கருத வேண்டும்.
தீபாவளி சீசனை முன்னிட்டு வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. இணையத்திலும் சரி, சந்தையிலும் சரி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் காத்திருக்கின்றன. புதிய வீடுகளுக்கும், வீட்டுக்கடன்களுக்கும் கூட பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. கிரெடிட் கார்டு மற்றும் டிஜிட்டல் வாலெட்களை பயன்படுத்தும் போது கேஷ்பேக் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே பண்டிகை காலங்களில் விற்பனையை அதிகரிக்க வர்த்தக நிறுவனங்கள் இத்தகைய உத்திகளை பின்பற்றுவது வழக்கமானது தான். எனினும், இப்போது மின் வணிக நிறுவனங்கள் இதை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன.
தள்ளுபடி சலுகைகள்வர்த்தக நிறுவனங்கள் வாரி வழங்கும் சலுகைகள் வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவது இயல்பானது தான். ஆனால், தள்ளுபடியில் குறைந்த விலையில் பொருட்களை வாங்கும் உற்சாகத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் வருத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.அது மட்டும் அல்ல தள்ளுபடியை விட தரம் முக்கியம் என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தள்ளுபடி சலுகைகளுக்கு பின்னே பொடி எழுத்துக்களில் மறைந்திருக்க கூடிய நிபந்தனைகளையும், மற்ற விபரங்களையும் கவனித்து முடிவு எடுப்பதும் அவசியம்.
ரியல் எஸ்டேட் ரியல் எஸ்டேட் துறையில் சில காலமாக சுணக்கம் நிலவி வருவதால் கட்டுமான நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி கொண்டிருக்கின்றன. எனவே, பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்படுவதாக கூறப்படும் சலுகைகள் பெரிய அளவில் வேறுபட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்திருக்க வேண்டும் என்கின்றனர் வல்லுனர்கள். வீடு வாங்க விரும்புகிறவர்கள், மற்ற அம்சங்கள் எல்லாம் தேவைக்கேற்ப அமைந்திருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்க நினைத்தால் அது குறித்து உறுதியான முடிவு எடுத்து நிறுவனத்தை அணுகுவது நல்ல பலன் தரும் என்கின்றனர்.
ஏனெனில், பல வீடுகளை பரிசீலித்துக் கொண்டிருப்பவர்களை விட, குறிப்பிட்ட வீட்டை வாங்க முடிவு செய்து விட்டவர்களுக்கு சலுகைகளை அளிக்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன என்கின்றனர். மேலும், அளிக்கப்படும் சலுகை குறிப்பிட்ட நிறுவனத்தின் திட்டம் எந்த அளவு விற்பனையாகி கொண்டிருக்கிறது என்பதை பொருத்தும் அமையும். அதே போல இலவச மாடுலர் கிச்சன், அல்லது பர்னிச்சர்கள் போன்றவை அளிக்கப்பட்டால் அவை தேவைக்கு ஏற்ப அமைந்துள்ளவையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அளிக்கும் வீட்டுக்கடன் சலுகைகளை பொருத்தவரை வட்டி விகிதம் உள்ளிட்ட அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நுகர்வோர் பொருட்கள்பிரிஜ், ‘டிவி’, வாஷிங் மிஷின் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை பொருத்தவரை நீட்டிக்கப்பட்ட வாரெண்டி, வாங்கும் போது பரிசுகள், குலுக்கல் முறையில் பரிசுகள், இ.எம்.ஐ., சலுகை, கேஷ்பேக் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஆனால், சலுகையில் தரப்படும் பொருட்கள் சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் புதிய மாதிரியா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மற்ற அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும். பிராண்ட்களையும் கவனிக்க வேண்டும். இணையத்தில் அந்த பொருட்களின் விலையை ஆய்வு செய்து ஒப்பிட்டு பார்ப்பதும் நல்லது. டீலர்கள் மற்றும் பிராண்ட்கள் தனித்தனியே சலுகைகளை வழங்குவதும் உண்டு. டீலர்கள் அளிக்கும் சலுகையோடு, பிராண்ட்கள் அளிக்கும் சலுகையும் இணைந்துள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
வாகனங்கள்இருசக்கர வாகனங்கள், கார்களும் கூட இந்த பட்டியலில் வருகின்றன. ஆனால், கார்கள் விஷயத்தில் சலுகைகளை மட்டும் பார்க்க கூடாது என்று வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர். முதல் பட்ஜெட்டை தீர்மானித்து அதனடிப்படையில் காரை தேர்வு செய்து அதன் பிறகு சலுகைகளை கவனிக்க வேண்டும் என்கின்றனர். எளிய கடன் வசதி, காப்பீடும், எக்ஸ்சேஞ்ச், தங்க நாணயம் என பல சலுகைகள் முன்வைக்கப்பட்டாலும் இறுதி விலை மற்றும் ஒட்டுமொத்த பலன் சாதகமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். எனவே, சலுகைகளை மட்டும் பார்த்து மயங்கி விடாமல், வாங்கும் பொருள் தரமானதும், நமக்கு தேவையானதும் தானா என்பதை தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|