பதிவு செய்த நாள்
11 டிச2016
03:31

பாஸ்டன்:‘மொபைல் போன் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளால், வளரும் நாடுகளில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் நிலை மேம்படும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், தவ்னீத் சூரி; மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தில், உதவி பேராசிரியராக உள்ளார். இவர், ஜார்ஜ் டவுன் பல்கலையின், பொருளாதார நிபுணர் வில்லியம் ஜாக் உடன் இணைந்து, ஆப்ரிக்க நாடான கென்யாவில், மொபைல் போன் பணப் பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதன் விபரம்:கென்யாவில், 2007ல், ‘எம் – பெசா’ என்ற, மொபைல் போன் வாயிலான பணப் பரிவர்த்தனை சேவை துவங்கப்பட்டது. மொபைல் போனில் பணத்தை சேமித்து வைக்கவும், பொருட்கள் வாங்கவும், நுண்கடன் நிறுவனங்களிடம், விவசாயம், சிறு வியாபாரம் போன்றவற்றுக்கு, குறைந்த வட்டியில் கடன் வாங்கவும், கடனை திரும்பச் செலுத்தவும், எம் – பெசா உதவுகிறது.
செலவினம்
கடந்த, 2008 முதல், இச்சேவையை பயன்படுத்திய வகையில், கென்யாவில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, 1.94 லட்சம் பேர் அல்லது 2 சதவீத குடும்பங்களின், அன்றாட தனிநபர் செலவினம் உயர்ந்துள்ளது. அவர்கள், வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.ஒரு நாளைக்கு, 1.25 டாலருக்கும் குறைவான செலவில், வாழ்வோரை, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் என, உலக வங்கி வரையறை செய்துள்ளது.
அதனடிப்படையில், ஆய்வில் பங்கேற்றோரின், அன்றாட தனிநபர் செலவினம், 2.50 டாலராக உயர்ந்துள்ளது.எம் – பெசா, முகவர்கள் அதிகம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த, குடும்பத்தினரின் அன்றாட தனிநபர் செலவினம் அதிகரித்து உள்ளது. இந்த முகவர்கள், வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை சேவையை பெறுவதற்கு பாலமாக விளங்குகின்றனர்.
ஒரு பகுதியில், ஐந்து முகவர்கள் அதிகரிக்கும் போது, அங்கு வசிக்கும் குடும்பங்களின் தனிநபர் செலவினம், சராசரியாக, 6 சதவீதம் உயர்ந்திருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெண்கள்
ஆண் தலைமையில் உள்ள குடும்பத்தை விட, பெண் தலைமையில் உள்ள குடும்பத்தின், செலவழிப்பு திறன் அதிகமாக உள்ளது. அதிலும், பெண்களில் பெரும்பாலானோர், வியக்கத்தக்க வகையில், பண்ணை சார்ந்த தொழில்களில் இருந்து, புதிய வியாபாரத்திற்கு மாறியுள்ளனர். வறட்சி, வெள்ளம், நோய், வேலையின்மை உள்ளிட்ட இடர்பாடுகளை சமாளிக்க, மொபைல் போன் பணப் பரிவர்த்தனை சேவை உதவும் என, ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
அத்தகைய சேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்தால், நீண்ட கால அளவில் வறுமையை ஒழிக்கலாம் எனக் கூறியதை, யாரும் புரிந்து கொள்ளவில்லை. முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, அதை புரிய வைக்கும் என, நம்புகிறோம். நிதியை, சிறந்த முறையில் நிர்வகிக்கவும், குறிப்பாக, பெண்கள், ஆண்களை சார்ந்திராமல், தனிப்பட்ட சேமிப்புகளை மேற்கொள்ளவும், எம் – பெசா உதவியதால், வறுமை ஒழிப்பு சாத்தியமாகி இருக்கலாம் என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|