பதிவு செய்த நாள்
12 டிச2016
05:31

ரொக்கம், டிஜிட்டல் மற்றும் மின்னணு பண வடிவம் என, நடைபெற்று வரும் விவாதத்தில், முற்றிலும் புதிய கருத்தாக்கமாக, அடையாளம் சார்ந்த பணம் எனும் கருத்தாக்கத்தை முன்வைக்கிறார், டேவிட் பிர்ச். டிஜிட்டல் பணம் தொடர்பான முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் பிர்ச், எதிர்காலத்தில், ஒருவரது அடையாளமே, பணத்தின் வடிவமாக இருக்கும் என்கிறார். இது தொடர்பான கருத்துக்களை, ‘ஐடென்டிடி ஈஸ் தி நியூ மணி’ புத்தகத்தில், அவர் விவரித்திருக்கிறார்.
இந்த புத்தகம் வலியுறுத்தும் கருத்தாக்கம் தொடர்பாகவும், அவரே எளிமையாக விளக்கி இருக்கிறார்:வருங்காலத்தில், நாம் அடையாளம் சார்ந்த புதிய பணத்தை பயன்படுத்த இருக்கிறோம். அடையாளம் என்பதன் இயல்பே மாறி கொண்டு வருவதால், இது தவிர்க்க இயலாதது. இன்றைய சமூகத்தில் உள்ள அடையாளம் தொடர்பான கருத்தாக்கம், இதற்கு முன், 19ம் நுாற்றாண்டு, 20ம் நுாற்றாண்டில் அறியப்பட்ட, அடையாளம் தொடர்பான கருத்தாக்கத்தில் இருந்து மாறுபட்டது. இதன் தொழில்நுட்பத் தன்மையை குறிப்பதற்காக, இதை புதிய அடையாளம் என, குறிப்பிடலாம்.
அடையாளத்தின் தன்மை மட்டும் மாறிக் கொண்டிருக்கவில்லை. தொழில்நுட்ப மாற்றம் காரணமாக, பணமும் இதே அளவு மாறிக் கொண்டிருக்கிறது. இந்த இரு போக்குகளும் ஒன்றிணைந்து வருவதால், நமக்கு பரிவர்த்தனைக்கு தேவைப்படுவதெல்லாம், அடையாளம் மட்டும் தான். இந்த போக்கின் நீண்டகால தாக்கத்தை கணிப்பது, மிகவும் கடினமானது. இதற்கு முக்கிய காரணம், பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் வர்த்தக வாய்ப்புகளை நிறுவனங்கள் ( வங்கிகள் அல்ல) எப்படி பயன்படுத்திக் கொள்ளும் என்பதை பொருத்தே இது அமையும்.
ஆனால், ரொக்கம் என்பது, தேவையற்று போகும் என்பதை மட்டும், என்னால் உறுதியாக சொல்ல முடியும்; இது நல்லது தான். மேலும், பலவகையான புதிய டிஜிட்டல் பண வடிவங்கள் பெருகும் நிலை வரும்.நம்பிக்கை அடிப்படையிலான மதிப்பு சார்ந்த பொருளாதாரத்திற்கு, நாம் மாறிவிடுவோம்.
கட்டுப்பாடுகளை விட, நம்பிக்கையே பரிவர்த்தனைகளை இயக்கக் கூடியதாக இருக்கும். இது, நிகழ வாய்ப்பில்லை என, நினைக்கத் தோன்றலாம். ஆனால், பொருளாதாரம் இப்படி தான் இயங்கி வருகிறது. கடந்த காலங்களில், இப்போது இருப்பது போலவே, நம் சமூக மதிப்பு அளவிடப்பட்டது. ஆனால், இது நம்முடைய மொபைல் போனில் அல்லாமல், நம் மூளையில் சேமிக்கப்பட்டிருந்தது. அடையாள அட்டை போன்றவை இருக்கவில்லை. மதிப்பை அளவிடும் நிறுவனங்கள் இருக்கவில்லை. எனவே, ஒருவரின் அடையாளம் என்பது, அவராகவே இருந்தது.
ஆனால், இணைக்கப்பட்ட சமூகத்தில் ஒருவருடைய சமூக தொடர்பு சார்ந்த அடையாளம் முக்கியத்துவம் பெற வாய்ப்புள்ளது. இப்போது, நம்முடைய வங்கி இருப்பு எந்த அளவு முக்கியமாக உள்ளதோ, அதே அளவு நம்முடைய அடையாளம் முக்கியத்துவம் பெறும். இந்த இடத்தில் தான், பணம் மற்றும் பொருளாதாரம் இடையிலான இணைப்பு உருவாக துவங்குகிறது.
சுருக்கமாக சொல்வதென்றால், பரிவர்த்தனைகளில் ரொக்கத்திற்கு பதிலாக அடையாளம் பயன்படுத்தப்படும். அதன்பின், பணத்தின் இடத்தில் அதற்கான மாற்றாகவே கூட, அடையாளம் அமையும் நிலை வரும். ---
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|