பதிவு செய்த நாள்
16 மார்2017
23:55

காஜியாபாத் : ‘‘வளர்ந்த நாடுகளில், வெளிநாட்டினர் மீதான வெறுப்பு அதிகரித்து வரும் சூழலில், இந்தியா, ஏராளமான வர்த்தக வாய்ப்புகளை, அன்னியருக்கு தாராளமாக வழங்கி வருகிறது,’’ என, பார்தி என்டர்பிரைசஸ் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்து உள்ளார்.
அவர், காஜியாபாத், மேலாண்மை தொழில்நுட்ப மையத்தின் பட்டமளிப்பு விழாவில், மேலும் பேசியதாவது:பொருளாதார வளர்ச்சியில் முன்னேறியுள்ள அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சில நாடுகளில், திடீரென்று, ‘மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு’ என்ற, பாதுகாப்புவாத குரல், ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானது, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேற முடிவு செய்தது போன்றவை எல்லாம், அந்நாடுகளில், அன்னியர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதையே காட்டுகிறது; அன்னிய குடியுரிமைக்கு எதிரான பிரசாரமும் பெருகிவருகிறது.
அதே சமயம், வளர்ந்த நாடுகள், தங்கள் பொருட்களை இந்தியாவில் விற்க துடிக்கின்றன. அதற்காக, அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை தளர்த்தக் கோரி, ஓரளவு வெற்றி பெற்றுவிட்டன. அந்த நாடுகள் தான், தற்போது பாதுகாப்புவாதம் பேசுகின்றன. வளர்ந்த நாடுகள், தங்கள் பொருட்களை வளரும் நாடுகளில் தடையின்றி விற்க, உலக வர்த்தக அமைப்பின் விதி உதவுகிறது. அதில், சேவைகளையும் சேர்க்க வேண்டும் என, இந்தியா போராடி, சமீபத்தில் வெற்றியும் பெற்றுவிட்டது.
வளர்ந்த நாடுகளுக்கு, தங்கள் பொருட்களை விற்க, இந்திய சந்தை தேவைப்படுவது போல, இந்திய சேவைகள் துறைக்கு, வளர்ந்த நாடுகள் தேவைப்படுகின்றன. அதனால், வளர்ந்த நாடுகள் குடியுரிமை பிரச்னைகளில் விட்டுக் கொடுத்து தான் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|