பதிவு செய்த நாள்
16 மார்2017
23:57

புதுடில்லி : மத்திய அரசு, ஏற்றுமதிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 600 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், ‘டைஸ்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
‘‘இதன் மூலம், ஏற்றுமதி தொடர்பான அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு, தீர்வு காணப்படும்,’’ என, இத்திட்டத்தை துவக்கி வைத்த, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: ஏப்., 1 முதல், நடைமுறைக்கு வர உள்ள இத்திட்டத்திற்காக, அடுத்த மூன்று நிதியாண்டுகளில், தலா, 200 கோடி ரூபாய் வீதம், 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து, சம நிதி பங்களிப்புடன், இத்திட்டம் செயல்படுத்தப்படும். வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும், 80 சதவீத தொகையை, மத்திய அரசு வழங்கும்.தொழிற்சாலையில் இருந்து, துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றுக்கு சரக்குகளை அனுப்புவதில் உள்ள, அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள் குறித்து, ஏற்றுமதி நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்படும். அதனடிப்படையில், ‘டைஸ்’ திட்டத்தின் கீழ், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, சுங்கச்சாவடிகள், எல்லையோர சந்தைகள், ஒருங்கிணைந்த சுங்க வசூல் மையங்கள், இணைப்பு சாலை வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக, தற்போது பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் இடம் பெறாத அம்சங்கள் அடையாளம் காணப்பட்டு, ‘டைஸ்’ மூலம் நிறைவேற்றப்படும். இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பணிகளுக்கு அனுமதி வழங்கி, கண்காணிக்கும் பொறுப்பு, மத்திய வர்த்தக அமைச்சக செயலர் தலைமையிலான, அமைச்சகங்களின் அதிகார குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
ஏற்றுமதியை மேம்படுத்த தேவையான, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன், அவற்றை நிர்வகித்து, பராமரிப்பதற்கான செலவை, பயன்பாட்டிற்கான கட்டண வசூல் மூலம் திரட்டிக் கொள்ள, புதிய திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. உரிய தரச்சான்றுடன், பல்வேறு சரக்குகளை விரைவாக ஏற்றுமதி செய்ய, புதிய திட்டம் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
3 நிதியாண்டுகள்:ஏற்றுமதி மேம்பாட்டு குழுக்கள், சிறப்பு ஏற்றுமதி மண்டல ஆணையங்கள், பொருள் வர்த்தக வாரியங்கள், அங்கீகரிக்கப்பட்ட, தலைமை வர்த்தக கூட்டமைப்புகள், ‘டைஸ்’ திட்டத்தில், நிதியுதவி பெற்று, அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களை, 2017 – 20 வரையிலான, மூன்று நிதியாண்டுகளுக்குள் மேற்கொள்ளலாம். நிதியுதவியில், 5 சதவீதத்தை, திட்ட ஆய்வு, மதிப்பீடு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|