பதிவு செய்த நாள்
09 ஏப்2017
01:17

புதுடில்லி : ‘‘இந்திய கைவினைஞர்களின் தயாரிப்புகளை, சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல, ஆடம்பர பொருட்கள் துறையினர் முன்வர வேண்டும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.பிரபல, ‘பிராண்டு’ நிறுவனங்களின் நவநாகரிக ஆடைகள், அணிகலன்கள் உள்ளிட்டவற்றை கொண்ட, ஆடம்பர பொருட்கள் துறையின் கருத்தரங்கம், டில்லியில் நடைபெற்றது. அதில், அமைச்சர் பங்கேற்று பேசியதாவது:கடந்த, 2014 நிலவரப்படி, சர்வதேச ஆடம்பர பொருட்களின் சந்தை மதிப்பு, 2 லட்சம் கோடி டாலராக உள்ளது. இதில், இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்காவை உள்ளடக்கிய, ‘பிரிக்ஸ்’ நாடுகளின் பங்களிப்பு, 30 சதவீதமாக உள்ளது.இந்தியாவில், ஆடம்பர பொருட்கள் சந்தை, வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, 700 – 800 கோடி டாலராக உள்ள, இச்சந்தையின் மதிப்பு, அடுத்த எட்டு ஆண்டுகளில், 10 ஆயிரம் கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ‘பிரிக்ஸ்’ நாடுகளில், இந்தியா மட்டுமே, 7.2 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியுடன் விளங்குகிறது.சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறும் இலக்குடன் முன்னேறத் துடிக்கும் இந்தியர்கள், ஆடம்பர பொருட்கள் துறையின் வளர்ச்சிக்கு உதவுவர்.இந்தியாவில் உயர் வருவாய் பிரிவினரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், உலகின் பெரும் பணக்காரர்களில், 6 சதவீதம் பேர், இந்தியர்களாக இருப்பர்.இத்தகையோரின் பங்களிப்பால், ஆடம்பர பொருட்கள் சந்தை மேலும் விரிவடையும்; இத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.அதே சமயம், ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், உள்நாட்டு கைவினைஞர்களை ஊக்குவித்து, அவர்களின் படைப்புகளை அதிகளவில் சந்தைப்படுத்த முன்வர வேண்டும்.இந்திய கைவினைஞர்கள், உலகத் தரம் வாய்ந்த கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். அத்தகைய பிரமாதமான ஆற்றல் உள்ளோர், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஊதியம் பெறுவதற்காக, நீண்ட வரிசையில் காத்திருப்பது வேதனை அளிக்கிறது. இந்திய கைவினைஞர்களை ஆடம்பர துறையினர் கை துாக்கி விட வேண்டும்.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களின் படைப்புகளுக்கு உரிய மரியாதையை ஏற்படுத்தி தர வேண்டும்.குறிப்பாக, இந்திய கைவினைஞர்களின் கலை படைப்புகளை, சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம், கைவினைஞர்கள் ஏற்றம் பெறுவர். கைவினைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அரசு மட்டுமே கைவினைஞர்களின் வளர்ச்சிக்கு உதவ முடியாது. அவர்களின் படைப்புகளுக்கும், சந்தைக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப, உள்நாட்டு நிறுவனங்களின் துணை மிகவும் அவசியம்.ஆடம்பர துறை நிறுவனங்கள், கைவினைஞர்களின் படைப்புகளை அதிகம் கொள்முதல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|