பதிவு செய்த நாள்
10 ஏப்2017
07:45

கடந்த வாரம் சந்தையைப் பொருத்தவரை உப்பு சப்பில்லாத வாரம் என்றே சொல்ல வேண்டும். குறிப்பிடும்படியான மாற்றங்கள் ஒன்றும் இல்லை.
நிப்டி 9173ல் இருந்து, 9198 வரை நகர்ந்தது. எப்.ஐ.ஐ., முதலீடு சற்றே மந்தமாக காணப்பட்டது. வெறும் 755 கோடி ரூபாய்க்கு மட்டுமே முதலீடு செய்தனர். டி.ஐ.ஐ., முதலீடு வெறும் 48 கோடி ரூபாய்க்கு மட்டுமே. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து, டாலருக்கு 64.28 ரூபாயில் முடிந்தது. இடையில், அமெரிக்கா, சிரியா நாட்டின் மீது தாக்குதல் நடத்திய செய்தி வந்தும் கூட, ரூபாயின் மதிப்பு குறையவில்லை. அன்று, மாலை ரூபாயின் மதிப்பு கூடியே செலாவணி வர்த்தகம் முடிந்தது.ரிசர்வ் வங்கி கவர்னர், கடன் வட்டிவிகிதத்தில் மாற்றம் எதுவும் கொண்டு வரவில்லை. இது எதிர்பார்த்ததுதான் என்றாலும், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு முக்கியமானதும் பாராட்டுக்குரியதும் ஆகும். வங்கிகள் தங்கள் வசமுள்ள உபரி பணத்தை ரிசர்வ் வங்கியில் தினமும் செலுத்துவர். இதற்கு ரிசர்வ் வங்கி, வட்டி கொடுக்கும்.
அந்த பணத்தை, அவசர தேவை உள்ள பிற வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி கொடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி கடன் வாங்கும் மற்றும் கொடுக்கும் வட்டி விகிதங்களுக்கு இடையே இருந்த பரவலான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. முடிவின் சாராம்சம் கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு அதிக வட்டி; கடன் வாங்கும் வங்கிகளுக்கு வட்டி குறைப்பு. இதனால், வங்கிகள் வசமுள்ள உபரி பணத்தை குறைத்து, பணவீக்கம் ஏற்படுவதையும் தவிர்த்து, கடன் கொடுக்க விரும்பும் வங்கிகளின் தேவையையும் பூர்த்தி செய்ய ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு வழி செய்யும். இந்த முடிவு, கவர்னரின் கூர்மையான முடிவெடுக்கும் திறனின் வெளிப்பாடாகும்.சந்தையில் பெருமுதலீடுகள் அதிகம் தென்படாவிட்டாலும், சிறு நிறுவன பங்கு வர்த்தகம் ஓங்கியது என்றே சொல்ல வேண்டும். சந்தையில், தனி முதலீட்டாளர்கள் தொடர்ந்து சிறு நிறுவன பங்குகளை வாங்கிக் குவித்தனர். இதனால், சிறு நிறுவன பங்குகளின் மதிப்பு பெருமளவு கூடியது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக இந்த வகையான நிறுவன பங்குகளில் மட்டுமே
முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் அதிகரித்துள்ளனர். முதலீடு செய்ய விரும்புவோர் மிக அதிகமாக இருப்பினும், முதலீட்டுக்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. இதனால், இந்த வகை பங்குகளின் மதிப்பு கிடுகிடு ஏற்றம் கண்டுள்ளன. எப்போதும், ஒரு பங்கின் விலை வேகமாக ஏறும்போது சந்தையின் கவனம் அதன் மேல் விழுவது இயற்கை. இதனால், அத்தகைய பங்கின் விலை மேலும் வேகமாக ஏறக் கூடும். இதுவே, சிறு, குறு நிறுவன பங்குகளில் சமீபகால போக்காக தொடர்கிறது. இந்த போக்கு நிலையானதா என்பதை ஆராயும் தருணம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. முதலீட்டாளர்கள் இந்தவகை முதலீடுகளில் மிகக் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இப்போது நிலவுகிறது. குறிப்பிட்ட பங்குகளின் மதிப்பு மிக அதிகமாக இருக்கும்போது அதில் வர்த்தகமும், விலையும் பெருகி, பெருவாரியான தனி முதலீட்டாளர்களை ஈர்க்கும் போக்கு சந்தையில் தொடர்கிறது.
சந்தையில் நடக்கும் முதலீட்டு தவறு களை தவிர்ப்பது ஒவ்வொரு முதலீட்டாளரின் கடமை. தவறுகளை உரிய தருணத்தில் முறையாக அடையாளம் கண்டால் மட்டுமே அவற்றை தவிர்க்க இயலும். அந்த வகையில், இது சந்தையில் உள்ள ஒவ்வொரு தனி முதலீட்டாளருக்கும் முக்கிய தருணம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|