பதிவு செய்த நாள்
13 ஜூன்2017
23:56

புதுடில்லி : ‘‘வேளாண் துறை நிறுவனங்கள், புதிய தொழிற்நுட்பங்களை புகுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை உருவாக்கி, ஏற்றுமதியை உயர்த்த வேண்டும்,’’ என, மத்திய வர்த்தக அமைச்சக செயலர் ரீடா தியோதியா வலியுறுத்தி உள்ளார்.
வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆணையத்தின் சார்பில், டில்லியில் நடைபெற்ற விழாவில், ரீடா தியோதியா மேலும் பேசியதாவது: வேளாண் பொருட்களுக்கான புதிய சந்தைகளை, நாம் அடையாளம் காண வேண்டும். இதன் மூலம், வேளாண் பொருட்களை அதிகளவில், சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல முடியும். அத்துடன், வேளாண் பொருட்களின் மதிப்பையும் உயர்த்த வேண்டும்.
தொழிற்நுட்பம்:
நாம் தற்போது, மதிப்பு கூட்டப்படாத வேளாண் பொருட்களையே, பெரும்பான்மையாக ஏற்றுமதி செய்து வருகிறோம். மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களின் பங்கு, மிகக் குறைவாகவே உள்ளது. இது, மிகவும் கவலை அளிக்கிறது. மிகச் சாதாரணமான பதப்படுத்தும் பணிகளுக்கோ அல்லது மதிப்பை கூட்டு வதற்கோ தான், இந்தியாவில் இருந்து பெரும்பான்மையான வேளாண் பொருட்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்த நிலையை மாற்றி, இந்தியாவிலேயே வேளாண் பொருட்களின் மதிப்பை கூட்ட, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அடுத்து, வேளாண் நிறுவனங்கள், தொழிற்நுட்பங்களை மேம்படுத்துவதில் தனி கவனம் செலுத்த வேண்டும். ஒருசில நிறுவனங்கள் மட்டுமே, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக, குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொள்கின்றன. புதிய தொழிற்நுட்பங்களை புகுத்துவதன் மூலம், புதிய சந்தைகளில் நுழைய முடியும். அது போல, சர்வதேச வாடிக்கையாளர்களை இந்தியாவுக்கு வரவழைத்து, இங்கு பின்பற்றப்படும் அனைத்து தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் விளக்க வேண்டும். இதன் மூலம், உள்நாட்டு நிறுவனங்களின் வேளாண் பொருட்களுக்கு, புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கும்.
வேளாண் பொருட்கள் உற்பத்தியாகும் இடம், அதன் போக்குவரத்தை கண்காணிக்கும் வசதி ஆகியவற்றுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. அதற்கேற்ப நாம் தயாராக, ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இயற்கை வேளாண் பொருட்கள்:
இயற்கை வேளாண் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு, அதற்கான சான்றுடன், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதில், நிறுவனங்கள் அக்கறை செலுத்த வேண்டும்.உலகெங்கும், ரசாயன கலப்பற்ற உரம் மூலம் விளைவிக்கப்படும் இயற்கை வேளாண் பொருட்களுக்கு, வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதை, இந்திய நிறுவனங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி, ஏற்றுமதியை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
‛‛சர்வதேச வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 2015ல், 1.75 லட்சம் டாலராக இருந்தது. இதில், இந்தியா, ஏழாவது இடத்தில் உள்ளது.’’
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|