பதிவு செய்த நாள்
14 ஜூன்2017
23:50

திருப்பூர் : கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், தமிழக ஏற்றுமதி வர்த்தகம், ஏழு சதவீதம் வளர்ச்சி அடைந்து, 1.78 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது; இந்திய அளவில், மூன்றாமிடத்தை பெற்றுள்ளது.
கடந்த, 2015 –16ம் நிதியாண்டில், 16 லட்சத்து, 31 ஆயிரத்து, 510 கோடி ரூபாயாக இருந்த, நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், 17 லட்சத்து, 75 ஆயிரத்து, 440 கோடி ரூபாயாக, 9 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில், தமிழகத்தின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, மதுரை என, பல்வேறு நகரங்களில், ஆடை உற்பத்தி தொழில் வளர்ச்சி பெற்று வருகிறது.
கடந்த 2015 – 16ம் நிதியாண்டில், 1.67 லட்சம் கோடி ரூபாயாக இருந்த, தமிழகத்தின் மொத்த ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், ஏழு சதவீதம் வளர்ச்சி அடைந்து, 1.78 லட்சம் கோடி ரூபாயை எட்டிஉள்ளது. ஏற்றுமதியில், 4.53 லட்சம் கோடி ரூபாயுடன், மஹாராஷ்டிர மாநிலம் முதலிடத்திலும்; 3.64 லட்சம் கோடி ரூபாயுடன், குஜராத் இரண்டாம் இடத்திலும், தமிழகம், மூன்றாமிடத்திலும் உள்ளது.
‘இந்திய டெக்ஸ்பிரனர்ஸ்’ கூட்டமைப்பு செயலர் பிரபு தாமோதரன் கூறுகையில், ‘‘நாட்டின் மொத்த ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்களிப்பு, 10 சதவீதமாக உள்ளது. மாநில ஏற்றுமதியில், 30 சதவீதத்துக்கு மேல், ஜவுளித்துறையின் பங்களிப்பு உள்ளது. ‘‘கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற ஜவுளி நகரங்களில், மாநில அரசு, சிறப்பு திட்டங்களை செயல்படுத்தினால், ஒவ்வொரு நிதியாண்டிலும், ஏற்றுமதி வளர்ச்சி விகிதம், 10 சதவீதமாக உயரும். அடுத்த ஆறு ஆண்டுகளில், தமிழகத்தின் மொத்த ஏற்றுமதி, 3 லட்சம் கோடி ரூபாயை தொடும்,’’ என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், ‘‘பல வகை தொழில் துறையினரின் முயற்சியாலேயே, தமிழக ஏற்றுமதி வர்த்தகம் இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளது. ‘‘அதிகளவு வேலை வாய்ப்பு வழங்குவதோடு, அன்னிய செலாவணியையும் ஈட்டித்தரும் ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டால், ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்களிப்பு மேலும் வளர்ச்சி பெறும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|