பதிவு செய்த நாள்
26 ஜூலை2017
23:43

புதுடில்லி : ‘‘சீராய்வு செய்யப்படும் அன்னிய வர்த்தக கொள்கையின் அடிப்படையில், ஏற்றுமதி வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் பரிசீலிக்கும்,’’ என, வர்த்தக துறை செயலர் ரீடா தியோதியா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: அன்னிய வர்த்தக கொள்கையின் இடைக்கால சீராய்வு பணி, முடியும் தறுவாயில் உள்ளது. இப்பணி, செப்டம்பருக்குள் முடிந்துவிடும். அக்கொள்கையின் அடிப்படையில், ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கும்.
இந்திய ஏற்றுமதியாளர்கள், தொடர்ந்து சர்வதேச கண்காட்சிகளில் பங்கு கொண்டு வருகின்றனர். அவர்கள், உள்நாட்டிலேயே, சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை அறிவதற்கு, 2018 ஜனவரியில், கிரேட்டர் நொய்டாவில் நடைபெற உள்ள, ‘இந்தஸ் உணவு’ என்ற சர்வதேச உணவு மற்றும் பானங்கள் கண்காட்சி உதவும். இதில், 35 நாடுகளைச் சேர்ந்த, 400க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
உணவு மற்றும் பானங்கள் துறையைச் சேர்ந்த, ஏற்றுமதி நிறுவனங்களின் தயாரிப்புகளை, சர்வதேச நிறுவனங்கள் அறியவும், வர்த்தகம் புரியவும், இக்கண்காட்சி துணை புரியும். உணவு பதப்படுத்துதல் அமைச்சகமும், வரும் நவம்பரில், சர்வதேச உணவு மாநாட்டை நடத்த உள்ளது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
இந்த மாநாட்டில், உணவு மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன. இது, உள்நாட்டு நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்பை வழங்கும். அது போல, ஏற்றுமதி நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|