பதிவு செய்த நாள்
15 ஜன2018
01:54

புத்தாண்டு துவங்கி, இரண்டு வாரங்கள் கடந்து விட்டது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் சூழல்...
புத்தாண்டு துவங்கி, இரண்டு வாரங்கள் கடந்து விட்டது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் சூழல்...சந்தையில், பட்ஜெட் சார்ந்த எதிர்பார்ப்புகள் அதிகமில்லை. பட்ஜெட் எல்லோரையும் திருப்திபடுத்தும் வண்ணம் அமையும் என்பதே ஒருமித்த கருத்து. ஆனாலும், சந்தைக்கு என்று சிறப்பாக எதுவும் இருக்காது என்றே பலரும் நினைக்கின்றனர்.
ஆக, சந்தைக்கு சாதகமாக இந்த பட்ஜெட்டில் அதிகம் இருக்காது என்றாலும், சந்தை களைகட்டி இருக்க என்ன காரணம்? பட்ஜெட்டையும் மீறி, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் காட்டும் ஆர்வம் சற்றும் குறையாதது ஏன்?
முதலீட்டாளர்கள், சந்தையில் பங்குகளின் மதிப்பு அதிகமாக உள்ளதை நன்கு அறிவர். விவரம் அறிந்தோர் தங்கள் முதலீடுகளை தள்ளிப் போட்டு காத்திருக்கின்றனர். இருந்தும், சந்தையில் பங்குகளுக்கான தேவை, விற்பனையை விட அதிகமாகவே இருக்கிறது.இதற்கு காரணம், பங்குகளை விற்க முதலீட்டாளர்கள் காட்டும் தயக்கம் சிறிதும் குறையவில்லை என்பதே. அந்த தயக்கமே, பங்குகளின் விலை ஏற்றத்திற்கும் காரணமாக அமைகிறது.
இந்த சூழலில், பன்னாட்டு முதலீட்டாளர்களும் இந்திய பங்குகளை தொடர்ந்து வாங்கினால், சந்தையில் வாங்குவோர் தேவையை நிறைவு செய்வது மிக கடினம். இதுவே, சந்தையின் தொடர் உயர்வுக்கும், வீழ்ச்சியில்லா நிலைக்கும் மூல காரணமாக அமைகிறது.
இந்த நிலை மாறி, பங்குகள், வாங்குவோரின் தேவைகளை எப்படி நிறைவடையச் செய்யும்? அதற்கு விற்பனைக்கும் தேவைக்கும் உள்ள இடைவெளி குறைய வேண்டும். இது எப்படி நடக்கும்?
இந்திய பெரு நிறுவனங்களும், மத்திய அரசும் தங்கள் பங்குகளை அதிகம் விற்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அரசின் நிதி பற்றாக்குறை இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதுவே, தொடர்ந்து பொதுத்துறை பங்குகளை விற்க வேண்டிய நிலைக்கு அரசை தள்ளும். ஒருபக்கம், ஈ.டி.எப்., என்று சொல்லக்கூடிய நிதிகள் மூலம் மத்திய அரசு பொதுத்துறை பங்குகளை விற்கும். மேலும், பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை நேரடியாகவும் அரசு விற்கும்.
டாடா ஸ்டீல் போன்ற பெரு நிறுவனங்கள், தங்கள் முதலீட்டாளர்களுக்கு, ரைட்ஸ் மூலம் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளன. இதுபோன்ற பெரிய பங்கு விற்பனைகள் நடக்கும் ஆண்டாக, இந்த ஆண்டு அமையக்கூடும்.
இந்த விற்பனைகள் முதலீட்டாளர்கள் பங்குகளில் இருக்கும் தேவையை பூர்த்தி செய்யும். ஏதோ ஒரு காலகட்டத்தில், விற்பனை தேவையை மிஞ்சும். அதுவரை, பங்குகளின் விலை எளிதில் வீழாது என்பதே சந்தையின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.
முதலீட்டாளர்கள் தொடர்ந்து நடக்கும் பங்கு விற்பனைகளை தெளிவாக ஆய்வு செய்து, மதிப்பு அடிப்படையில், சாதகமாக தெரியும் பங்குகளை மட்டுமே வாங்க வேண்டும். முதலீட்டு தேர்வுகளில் மிக அதிக கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. இந்த சூழலை சாதகமாக்கிக் கொள்ள, பல தனியார் நிறுவனங்கள் அவசர பங்கு விற்பனையில் ஈடுபடும். நிறுவனமோ அல்லது நிறுவனரோ கூட பங்குகளை விற்கலாம்.
இந்த விற்பனைகள், வருங்காலத்தில் நஷ்டம் ஏற்படுத்தக் கூடும் என்பதை நினைவில் கொண்டு, நம் முதலீட்டு தேர்வுகளை மிக கவனமாக செய்ய வேண்டும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|