பதிவு செய்த நாள்
02 ஏப்2018
00:41

வீடியோகான்
நிறுவனத்துக்கு கடன் கொடுத்ததில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைவர்,
சந்தா கோச்சாரின் குடும்பம் கைமாறு பெற்றதா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., நிர்வாகம், இதை முற்றிலும்
மறுத்து, அவர் மீது முழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனாலும்,
எழுப்பப்படும் கேள்விகளும் சந்தேகங்களும் நம் கவனத்தைக் கவரவே
செய்கின்றன.கிணறுவெட்ட பூதம் கிளம்பியதாக ஒரு பழமொழி உண்டு.
வாராக் கடன் என்ற கிணறுவெட்ட ஆரம்பித்தவுடன், ஒரு பூதம் அல்ல; பல
பூதங்கள் வெளியே கிளம்பி வந்துகொண்டு இருக்கின்றன. வீடியோகானும் அதில் ஒன்று.
கிட்டத்தட்ட 49,000 கோடி ரூபாய் கடனை நிலுவையில் வைத்துள்ளது, இந்நிறுவனம்.
அதில், 29,000 கோடி, இந்திய வங்கிகளில் வாங்கப்பட்டவை. மிச்சம் 20,000 கோடி, வெளிநாட்டு வங்கிகளில் இருந்து பெறப்பட்டவை.2ஜி
அலைக்கற்றை உரிமத்தை இழந்ததிலும் ரியல்எஸ்டேட் துறையில்
ஈடுபட்டு, கையைச் சுட்டுக்கொண்டதிலும், வீடியோகானுக்குப் பெருத்த
நஷ்டம்.
தற்போது வாராக் கடன் நிறுவனங்கள் பட்டியலில்
வீடியோகானும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துணை
நிறுவனத்தையும் சொத்துகளையும் விற்று, கடனை அடைத்துக்கொண்டு
வருகிறது இந்த நிறுவனம்.ரூ.64 கோடி முதலீடுவீடியோகானுக்கு,
20 வங்கிகளின் கூட்டமைப்பு கடன் கொடுத்தது. அதில் ஐ.சி.ஐ.சி.ஐ.,
வங்கியும் ஒன்று. சுமார், 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
அதில், 86 சதவீதம், அதாவது 2,810 கோடி ரூபாய் திரும்பி வாராக் கடன்
ஆகிவிட்டது. இதை எப்படி வசூலிப்பது என்பது இன்னொரு பெரிய கவலை.
இதேசமயத்தில் வேறொரு டிராக்கில் வேறொரு கதை ஓடிக்கொண்டிருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு இங்கே மீண்டும் வருவோம்.
கடன்
கொடுத்த, ஐ.சி.ஐ.சி.ஐ., நிறுவனத்தின் தலைவர் சந்தா கோச்சாரின்
கணவர் தீபக் கோச்சாரும், வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால்
துாத்தும் டிசம்பர் 2008ல் ’நுபவர்’ என்றொரு நிறுவனத்தைத்
தொடங்கினர்.தொடங்கிய சில மாதங்களிலேயே துாத், நுபவர் நிறுவனப்பங்குகள் அனைத்தையும் தீபக்குக்கே விற்றுவிட்டார்.
பின்னர், இந்த நுபவர் நிறுவனத்தில், துாத் தலைமையிலான சுப்ரீம் எனர்ஜி என்ற
நிறுவனம் 64 கோடி முதலீடு செய்தது. அப்போது
சுப்ரீம் எனர்ஜி நிறுவனம் நுபவரின் பெரும்பான்மைப் பங்குகளை
வைத்திருந்தது. துாத், தன் பங்குகளை உறவினரான மகேஷ் சந்திர
புங்கியா என்பவருக்குக் கொடுத்துவிட்டார்.
இந்த மகேஷ் சும்மா இல்லாமல்,
தன்னிடம் வழங்கப்பட்ட பங்குகள் அனைத்தையும் பின்னக்கல் எனர்ஜி
என்ற இன்னொரு நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார்.பின்னக்கல்
நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் யார் தெரியுமா? சந்தா
கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரே தான். அதுவும் மிகவும் சல்லிசான விலைக்குப் பங்குகள் கொடுக்கப்பட்டன.
அதாவது
தலையைச் சுற்றி, மீண்டும் மூக்கைத் தொட்டு இருக்கிறார்கள்.
நுபவருக்கு வீடியோகான் மூலம் லாபம். பயன் அடைந்தவர் தீபக் கோச்சார்.கேள்விகள்இப்போது மெயின் பிக்சருக்கு
வருவோம். இந்தக் கொடுக்கல் வாங்கல் நடந்து கொண்டிருந்தபோது
தான், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வீடியோகானுக்கு 3,250 கோடி ரூபாயை கடனாகக்
கொடுத்தது. அதுதான் இப்போது வாராக்கடனாகத் தொங்கிக்கொண்டு
இருக்கிறது.
தம் கணவரின் நிறுவனத்துக்கு உதவி செய்ததால்தான்,
சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் கொடுத்தாரா என்ற
கேள்வி எழுப்பப்படுகிறது. கடந்த, 2016 முதலே நுபவர்,
சுப்ரீம்
எனர்ஜி, பின்னக்கல் என்று ஒவ்வொரு நிறுவனத்தையும் தொட்டுத் தொட்டு
ஆராய்ந்து, அக்குவேறு ஆணிவேறாக விளக்கி, மத்திய அரசுக்கும்
பிரதமருக்கும் புகார் எழுதிய உண்மை விளம்பியின் பெயர், அரவிந்த்
குப்தா.
தற்போது, வீடியோகான் நிறுவனமும் வாராக் கடன்
பட்டியலில் இணைந்தவுடன், அரவிந்த் குப்தாவின் சந்தேகங்கள்
மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.வீடியோகானுக்கு கடன்
கொடுக்க ஒப்புதல் வழங்கிய, ஐ.சி.ஐ.சி.ஐ., நிர்வாகக் குழுவில்
அப்போது சந்தா கோச்சார் இல்லை; இது, 20 வங்கிகளின் கூட்டமைப்பு
சேர்ந்து கொடுத்த கடன்; அதில், 10 சதவிகித அளவுக்கே ஐ.சி.ஐ.சி.ஐ., கடன்
உள்ளது; இதற்காக சந்தா கோச்சார் எந்தவகையிலும் கைமாறு பெறவில்லை,
முறைதவறியும் சகாயம் செய்யவில்லை என்று விளக்கியுள்ளது,
ஐ.சி.ஐ.சி.ஐ., தரப்பு.
இதில் உண்மை இருக்கலாம். சந்தா கோச்சார் அப்பழுக்கற்ற நேர்மையோடு நடப்பவராக இருக்கலாம்.ஆனாலும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான ‘செபி’, ஐ.சி.ஐ.சி.ஐ., பின்பற்றவேண்டிய நிர்வாக ரீதியான அறக்கோட்பாடுகளைப் பின்பற்றியுள்ளதா என்பதை
ஆராயப் புகுந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
இது
முன்னெச்சரிக்கை நடவடிக்கை. பாருங்கள், சென்ற வாரம் கூட, கர்நாடக
வங்கி திடீரென்று விழித்துக்கொண்டு, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம்
எங்களை, 86.47 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டது என்று புகார்
தெரிவித்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் கர்நாடக வங்கியின் பெயரில் போலியாக வங்கிக் கிளை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதெல்லாம் வங்கி அதிகாரிகளுடைய
உதவியில்லாமல் நடந்திருக்க வாய்ப்புண்டா என்ன? நிரவ் மோடி மற்றும்
கீதாஞ்சலியின் மெகுல் சொக்ஸியின் மோசடிகள் அம்பலமான உடனேயே
பதறியிருக்க வேண்டாமா கர்நாடக வங்கி? சுமார் ஒரு மாதம் கழித்து வாய்
திறப்பது என்ன நியாயம்?
தவறுகள் நடப்பது தெரிந்தும், கள்ளமெளனம் சாதிப்பது ஏன்?ஆர்.பி.ஐ.,
வாராக் கடன் தொடர்பாக கிடுக்கிப் பிடி உத்தரவுகளைப்
போட்டதால்தான், ஒவ்வொரு வங்கியும் மெதுமெதுவாக உண்மைகளை
வெளியிடத் தொடங்கியுள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ., – வீடியோகான்
விவகாரத்தையும் இந்தப் பின்னணியில் இருந்துதான்
பார்க்கவேண்டும்.
பொதுத் துறை வங்கிகள் போல் தனியார் வங்கிகளில்
மோசடிகள் நடைபெறாமல் இருக்கலாம். ஆனால், தொழில்துறையினரோடும்
பெரிய மனிதர்களோடும் தேவைக்கு அதிகமாக இணக்கம் காட்டுவது,
சலுகைகள் வழங்குவது, நீக்குப்போக்குடன்செயல்படுவது ஆகியவை ஆபத்தான சரிவுப் பாதை.பெரிய
நிறுவனங்களோடு பழகும்போது, தங்களுக்கென்று வகுக்கப்பட்ட
எல்லைக்கோட்டுக்குள் நின்று வங்கிகள் செயலாற்றுவதே, மக்கள்
மத்தியில் நம்பிக்கையை மேம்படுத்தும். இல்லையெனில், தேனை
வழித்தவன், புறங்கையை நக்காமல் போவானா என்ற அவப்பேச்சு எழவே
செய்யும்.
சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற வரி வங்கித் துறைக்கும் பொருந்தும்.
ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|