பதிவு செய்த நாள்
05 மே2018
00:57

கோவை :தமிழக பஞ்சாலைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க, திரிபுரா மாநிலத்திலிருந்து, 1,635 ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது.
தமிழக ஜவுளி துறையில், 60 லட்சம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பஞ்சாலைகள், கைத்தறி, விசைத்தறி நெசவு மற்றும் பின்னலாடை தொழில் என, விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. ஆனால், சமீபகாலமாக ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, தென்னிந்திய பஞ்சாலை சங்கமான, ‘சைமா’ முயற்சியில், வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது.
திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில், ஏப்., 25, 26ம் தேதிகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், 4,000 பேர் பங்கேற்றனர். 20 மாற்றுத் திறனாளிகள், 264 பெண்கள் உட்பட, மொத்தம், 1,635 பேர் பஞ்சாலைகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
சைமா தலைவர் நடராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வேலைவாய்ப்பு முகாமுக்கு, திரிபுரா மாநில அரசு விரிவான விளம்பரங்கள் செய்திருந்தது.‘முதல்வர் பிப்லப் குமார் தேவ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சிறப்பான ஒத்துழைப்பு அளித்தனர். தேர்வு செய்யப்பட்டுள்ள ஆட்களை தமிழகம் அழைத்து வர, சிறப்பு ரயில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
‘இது போன்ற முகாம்களை மற்ற மாநிலங்களிலும் நடத்த, ‘சைமா’ முயற்சி எடுத்து வருகிறது. தேர்வு செய்த தொழிலாளர்களுக்கு சட்ட, சமூகப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என, தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|