பதிவு செய்த நாள்
22 ஜூலை2018
01:00

புதுடில்லி: நிறுவனங்கள் தொடர்பான குற்றங்களில், 83 கிரிமினல் பிரிவுகளை, சிவில் பிரிவுகளாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகளில், பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக, ஏராளமான வழக்குகள் தேங்கியுள்ளன.
அவற்றை குறைக்கும் நோக்கில், 2013 – நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து ஆராய, மத்திய அரசு, உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
குற்றப் பிரிவு : மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர், இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் தலைமையில், 10 உறுப்பினர்களை கொண்ட இக்குழு, நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறி, நிர்வாகிகளுக்கு அளிக்கும் அதிக ஊதியம் உட்பட, 83 கிரிமினல் குற்றங்களை, சாதாரண குற்றப் பிரிவிற்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது.இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, நிறுவனங்கள் நிர்வாக பொறுப்புகளில் உள்ளோருக்கு வழங்கும் ஊதியத்திற்கு வரையறை உள்ளது. இது தொடர்பான விதிமீறலுக்கு வழங்கும் தண்டனை பிரிவில், மாற்றம் செய்யப்படும் என, தெரிகிறது.ஒரு நிறுவனம், நிகர லாபத்தில், 11 சதவீத அளவிற்கே, முழு நேர இயக்குனர்களாகவும், நிர்வாக இயக்குனர்களாக உள்ளோருக்கும் ஊதியம் உள்ளிட்ட ஊக்கத் தொகை வழங்கலாம். இது, நிர்வாக இயக்குனர்களாக இல்லாமல், முழு நேர இயக்குனர்களாக மட்டும் உள்ளோருக்கு, 1 சதவீதமாக உள்ளது.ஒரு நிர்வாக இயக்குனர் அல்லது முழு நேர இயக்குனரை கொண்ட நிறுவனங்கள், நிகர லாபத்தில், 5 சதவீதத்திற்கு மிகாமல், ஊதியம் வழங்கலாம். இது, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்குனர்கள் உள்ள நிறுவனங்களுக்கு, 10 சதவீதமாக உள்ளது.அதிகாரம்இது போன்ற பல்வேறு அம்சங்களில், விதிமீறல் நிறுவனங்கள் மீது, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவற்றில், சில சாதாரண குற்றங்களை விசாரிக்கும் அதிகாரம், மத்திய நிறுவன விவகாரங்கள் துறைக்கு வழங்க, உயர்மட்டக்குழு பரிந்துரைக்கும் என, தெரிகிறது.மிகவும் முக்கிய குற்றங்களை மட்டும், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் விசாரிக்கும் வகையில், நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படலாம்.அடுத்து, நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு, தனி இயக்குனர்களை கிரிமினல் குற்றவாளியாக ஆக்குவது குறித்த சட்டப் பிரிவிலும் திருத்தம் செய்ய, உயர்மட்டக் குழு பரிந்துரைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுபோல, சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது அபராதம் விதிக்கக்கூடிய குற்றப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் தன்மை குறித்தும் குழு ஆராயும்.இவ்வாறு அவர் கூறினார்.வழக்குகள் தேக்கம்இந்தாண்டு ஏப்ரல் நிலவரப்படி, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில், 9,073 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில், திவால் நடவடிக்கையின் கீழ், 2,511 வழக்குகள்; இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பாக, 1,630 வழக்குகள் அடங்கும். இதர குற்றங்களின் பேரில், 4,932 நிறுவனங்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|