பதிவு செய்த நாள்
08 ஆக2018
01:50

விருதுநகர்:பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு முடிவுக்கு வராததால், வட மாநில வியாபாரிகள் ஆர்டர்கள் கொடுக்க தயக்கம் காட்டும் நிலை தொடர்கிறது. இதனால், சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பாதிப்புகளை சந்திக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், 1923-ம் ஆண்டு முதல், பட்டாசு உற்பத்தி நடந்து வருகிறது. தற்போது, 911 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. நேரடியாக மூன்று லட்சம் சார்பு தொழில்கள் மூலம், 8 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர். பட்டாசால் மாசு என்ற காரணம் காட்டி, நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பதற்கும், விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இன்று, இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு முடிவு பெறாமல் நீண்டு கொண்டே செல்வதால், வடமாநில வியாபாரிகள் ஆர்டர்கள் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.தீபாவளிக்கு, 3 மாதங்கள் கூட இல்லாத நிலையில், பட்டாசு ஆர்டர்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இதனால், பெரும்பாலான ஆலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது.
தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்க முடியாமல் உரிமையாளர்கள் தவிக்கின்றனர். வழக்கை விரைந்து நடத்தி, விரைவில் நல்ல முடிவு கிடைக்க வேண்டும், என்பது பட்டாசு தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பாகும்.
சுதேசி தொழில்
வழக்கின் தீர்ப்பு, பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக இருந்தால், பட்டாசு தொழில் அடியோடு முடங்கி விடும். கடந்த ஆண்டு, டெல்லி மற்றும் பட்டாசு விற்பனையின் மிகப்பெரிய சந்தையாகத் திகழும் வட இந்தியாவின் ஐந்து மாநிலங்களில், தீபாவளியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால், சிவகாசியில் பட்டாசு தொழில் முடங்கியது. இம்முறையும் பெரும்பாலான வியாபாரிகள் ஆர்டர் கொடுக்கவில்லை. உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் கருதி, சுதேசி தொழில் என முறைப்படுத்தினால், பிரச்னையின்றி தொழிலை தொடர முடியும் என, கருத்து தெரிவித்துள்ளார்,
’டிப்மா’ சங்கத்தின் இணைச் செயலர் ராஜப்பன்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|