பதிவு செய்த நாள்
08 ஆக2018
02:02

புதுடில்லி:‘கச்சா எண்ணெய் விலையேற்றம் நீடித்தால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, அடுத்த, 12 மாதங்களில், 70 ரூபாயாக சரிவடையும்’ என, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, நிதிச் சேவை நிறுவனமான, ‘கிரெடிட் சூசி’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:அமெரிக்க டாலர் மதிப்பு, எதிர்பாராத வகையில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, ‘ஜி – 10’ நாடுகளின் கரன்சி மற்றும் சீனாவின் ரென்மின்பி கரன்சிக்கு நிகரான, டாலர் மதிப்பு அதிகரித்துள்ளது.இது, இந்திய ரூபாய் மதிப்பிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறையாத வரை, ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு வலுவடைந்தே தீரும்.
அதனால், ரூபாய் மதிப்பு, மூன்று மாதங்களில் குறையும் என்ற முந்தைய மதிப்பீட்டில் மாற்றம் ஏதும் இல்லை. அதுபோல, அடுத்த, 12 மாதங்களில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 70 ஆக சரிவடையும் என்ற முன்னறிவிப்பிலும் மாற்றமில்லை.தற்போது, ரூபாய் மதிப்பு, 68.75 – - 68.95 என்ற அளவில், ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.
அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து அதிக முதலீடுகளை திரும்பப் பெற்று வருவதும், ரூபாய் மதிப்பு சரிய ஒரு காரணம் எனலாம்.
பணவீக்கம்
பணவீக்க உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றை தடுக்க, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில், இரு முறை, ‘ரெப்போ’ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது, ஓரளவு பலன் தரும்.அதேசமயம், ரிசர்வ் வங்கி, அடுத்தடுத்து ரெப்போ வட்டியை உயர்த்தியதால், இந்தாண்டு மீண்டும் உயர்த்த வாய்ப்பில்லை. எனினும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டால், அதை கட்டுப்படுத்த, மூன்றாவது முறையாக, ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டாலும் வியப்பதற்கில்லை.
மேலும், பொதுத் தேர்தல் வருவதையொட்டி, ஊரக முன்னேற்ற திட்டங்களுக்கு, அரசு கூடுதல் நிதி ஒதுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இத்துடன், அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை போன்ற காரணங்களால், அடுத்த ஓராண்டிற்குள், ரூபாய் மதிப்பு, 70ஆக சரியும் என, தெரிகிறது. உலகளவில் காணப்படும் ஸ்திரமற்ற நிலை, பணவீக்க உயர்வு போன்றவற்றின் தாக்கம், ரூபாய் மதிப்பில் எதிரொலிக்கிறது.
இந்தாண்டு, அமெரிக்க டாலருக்கு நிகரான, இதர நாடுகளின் கரன்சியை விட, ரூபாய் மதிப்பு அதிகம் வீழ்ச்சி கண்டு உள்ளது. கடந்த மாதம், அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இடையே, முதன் முறையாக, 69.09 ஆக, சரிவடைந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வெளியேறும் முதலீடு
இந்தாண்டு, ஜூலை இறுதி வரை, அன்னிய முதலீட்டு நிர்வாக நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையில் இருந்து, 940 கோடி டாலர் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளன. ஏப்ரலில், அதிகபட்சமாக, 560 கோடி டாலர் வெளியேறியுள்ளது. இதன் காரணமாக, தொடர்ந்து மூன்று மாதங்களாக, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவு அதிகரித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|