பதிவு செய்த நாள்
16 ஆக2018
23:59

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, வீழ்ச்சியில் தினந்தோறும் புதிய சாதனை படைத்து வருகிறது.
துருக்கி நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது. பெருகும் வெளிநாட்டுக் கடன்களை சமாளிக்க, போதுமான அன்னிய செலாவணியும் கையிருப்பில் இல்லை. அத்துடன், உள்நாட்டு அரசியல் குழப்பமும் சேர்ந்ததால், இந்தாண்டில், கடந்த வார துவக்கம் வரை, துருக்கியின், ‘லிரா’ கரன்சி மதிப்பு, 40 சதவீதத்திற்கும் மேலாக சரிவடைந்து காணப்பட்டது.
கறுப்பு திங்கள் :
இந்நிலையில், உளவாளி என்ற குற்றச்சாட்டில், வீட்டுக் காவலில் உள்ள, அமெரிக்க பாதிரி யார், ஆன்ட்ரூ பிரன்சனை விடுவிக்க, துருக்கி மறுத்து விட்டது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த, 10ம் தேதி, துருக்கியின் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்துவதாக அறிவித்தார். இதனால், அன்று லிரா மதிப்பு, ஒரே நாளில், 14 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்தது. இதன் தாக்கம், இவ்வாரத்தின் துவக்க வர்த்தக தினமான, 13ம் தேதி எதிரொலித்தது.
இந்தியா உட்பட, உலக நாடுகளின் கரன்சி மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, முதன் முறையாக, 69.93 ஆக சரிந்தது. உலகளவில், ‘கறுப்பு திங்கள்’ என, ஊடகங்கள் வர்ணித்தன. செவ்வாயன்று, அன்னிய செலாவணி வர்த்தகத்தின் இடையே, ரூபாய் மதிப்பு, முதன் முறையாக, 70ஐ தாண்டி, 70.10 வரை மீண்டும் வீழ்ச்சி அடைந்தது.
பதிலடி :
இதையடுத்து, ரிசர்வ் வங்கி, டாலர் புழக்கத்தை அதிகரித்ததால், வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, 69.90க்கு திரும்பியது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதன் கிழமை, நிதிச் சந்தைகள் இயங்கவில்லை. அன்று, துருக்கி, அமெரிக்காவின் அரிசி, மதுபானம், கார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட பொருட்கள் இறக்குமதி வரியை, இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்தியது.
இதன் தாக்கத்தால், வியாழக்கிழமையான நேற்று, அன்னிய செலாவணி வர்த்தகத்தின் இடையே, ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில், 70.40ஆக வீழ்ச்சி கண்டது. வர்த்தகத்தின் இறுதியில், 70.17ல் நிலைகொண்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 1,802 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இது குறித்தும், சீனாவின் பொருளாதார மந்தநிலை, வளரும் நாடுகளின் கரன்சி மதிப்பின் சரிவு ஆகியவற்றின் தகவல்களும் வெளியாகி, ரூபாய் மதிப்பை சரிய வைத்தன. மேலும், நிதிச் சந்தையில் இருந்து வெளியேறி வரும் அன்னிய முதலீடு, இழப்பை குறைக்க, இறக்குமதியாளர்கள் அதிக அளவில் டாலரை வாங்கிக் குவிப்பதாலும், ரூபாய் மதிப்பு பலவீனம் அடைந்துள்ளது.
அச்சம் வேண்டாம் :
‘‘டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, மூன்று ஆண்டுகளாக, 17 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தாண்டில், 9.8 சதவீத மதிப்பு தான் குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகிறது. ஏற்றுமதி அதிகரிக்கத் துவங்கிஉள்ளது. ‘‘வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது. வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதனால், ரூபாய் மதிப்பின் சரிவால் அச்சம் வேண்டாம். அது, மீண்டும் இயல்பு மதிப்பிற்கு திரும்பும்,’’ என, மத்திய அரசின் கொள்கை உருவாக்க அமைப்பான, ‘நிடி ஆயோக்’ துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|