பதிவு செய்த நாள்
01 செப்2018
05:15

புதுடில்லி : சமீப காலமாக, நிறுவனங்களில் இருந்து ஏராளமான, ‘ஆடிட்டர்’கள் விலகி வருகின்றனர். இந்தாண்டு, ஜன., – ஜூலை, 17 வரை, பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்களில் இருந்து, 204 ஆடிட்டர்கள் விலகி உள்ளனர். இதனால், இந்நிறுவனங்களின் பங்கு விலை, 20- – 60 சதவீதம் குறைந்துள்ளது.
ஆடிட்டர்களின் விலகலுக்கு, நிறுவனங்கள், போதிய விபரங்களை தந்து ஒத்துழைக்காதது தான் காரணம் என, கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில், நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா; ஆடிட்டர்கள் விலகலுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை விசாரித்து, அறிக்கை அளிக்குமாறு, நிறுவன பதிவு இயக்குனர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஆடிட்டர்கள் விலகலுக்கான காரணத்தை தெரிவிக்குமாறு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை, கடிதம் அனுப்பி உள்ளது.
மேலும், ஆடிட் நிறுவனங்கள், ஆடிட் குழு தலைவர்கள், தனி ஆடிட்டர்கள் ஆகியோரையும் காரணம் குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளது. அத்துடன், கணக்கு தணிக்கை விதிமுறைகளை உருவாக்கும், ஐ.சி.ஏ.ஐ., எனப்படும் இந்திய பட்டய கணக்காளர் மையத்துடன் ஆலோசிக்கவும், திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிறுவனங்கள் சட்டம், 143ம் பிரிவு, ஆடிட்டர்கள் பின்பற்ற வேண்டிய, கணக்கு தணிக்கை விதிமுறைகளை கூறுகிறது. அவற்றை கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு, ஆடிட்டர்களுக்கு உள்ளது. ஐ.சி.ஏ.ஐ.,யின், கணக்கு தணிக்கை விதிமுறை, ஒத்துழைக்காத நிறுவனங்களில் இருந்து, ஆடிட்டர்கள் விலக அனுமதிக்கிறது.
அதனால், கணக்கு தணிக்கை விதிமுறைகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு, ஐ.சி.ஏ.ஐ.,யிடம் மத்திய அரசு கேட்டுக் கொள்ளும் என, தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|