பதிவு செய்த நாள்
07 அக்2018
03:10

புதுடில்லி:மத்திய நேரடி வரிகள் வாரியம், நீண்ட கால மூலதன ஆதாய வரி சலுகை தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
இதன் மூலம், புதிய பங்கு வெளியீடுகள் மற்றும் தொடர் பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்வோர் அதிகம் பயன் பெறுவர்.பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு யூனிட்டுகள், வர்த்தக அறக்கட்டளை யூனிட்டுகள் ஆகியவற்றின் விற்பனைக்கு, நிதிச் சட்டம், 2018ன் படி, சலுகை அடிப்படையிலான, நீண்ட கால மூலதன ஆதாய வரி, 10 சதவீதமாக உள்ளது.
பங்கு விற்பனை
இச்சலுகையை பெற, பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு யூனிட்டுகள், வர்த்தக அறக்கட்டளை யூனிட்டுகள் ஆகியவற்றின் விற்பனையில், 0.10 சதவீத பங்கு பரிவர்த்தனை வரி செலுத்தி இருக்க வேண்டும்.எனினும், ஒரு சிலவற்றின் விற்பனைக்கு, மத்திய அரசு, பங்கு பரிவர்த்தனை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
இந்நிலையில், நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை தொடர்பான புதிய விதிமுறைகளை, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.அதன்படி, பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு யூனிட்டுகள், வர்த்தக அறக்கட்டளை யூனிட்டுகள் ஆகியவற்றின் விற்பனையில், பங்கு பரிவர்த்தனை வரி செலுத்தாத போதிலும், நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம்
இதனால், புதிய பங்கு வெளியீடுகள், தொடர் பங்கு வெளியீடுகள், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தின் போனஸ் அல்லது உரிமைப் பங்குகளின் விற்பனையில், நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை பெற முடியும்.மேலும், நீதிமன்றம், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புகளின் அனுமதியுடன் கையகப்படுத்தும் நிறுவனத்தின் பங்குகளுக்கும், இச்சலுகை பொருந்தும். அத்துடன், ஒரு நிறுவனம், பணியாளர்களுக்கு ஒதுக்கும் பங்கு விற்பனையிலும், இச்சலுகையை பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலுகை கிடையாது
முன்னுரிமை அடிப்படையில் பங்கு ஒதுக்கீடு செய்து, பிராந்திய பங்குச் சந்தைகளில் இடம் பெற்றுள்ள, அதிக அளவில் வர்த்தகம் நடைபெறாத பங்குகளுக்கு, நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை கிடையாது. அதுபோல, ஒரு நிறுவனம், பிராந்திய பங்குச் சந்தையில் இருந்து நீக்கப்பட்டு, பின் மீண்டும் இடம் பெறும் காலத்திற்குள், கைமாறும் பங்குகளுக்கும், நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை பொருந்தாது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|