பதிவு செய்த நாள்
08 அக்2018
00:22

கடந்த வாரம், இந்திய பொருளாதாரத்தை கிடுகிடுக்க வைத்த விஷயங்களில் முக்கியமானது, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., என்ற, நிறுவனத்தின் சரிவு தான்.அமெரிக்காவில், 2008ல் ‘லேமன் பிரதர்ஸ்’ நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பு போன்றது இது என்ற அனுமானம் ஒரு பக்கம். மற்றொரு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன குளறுபடி போன்றதா இது என்ற கேள்வி இன்னொரு பக்கம்.
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனத்தில் என்ன நடந்தது?
இந்தியாவில் வளர்ச்சிப் பணிகளுக்கு அடித்தளமாக இருப்பவை, நீண்டகால திட்டங்கள். உதாரணமாக, நெடுஞ்சாலைகள் அமைப்பது, சுரங்கப் பாதைகள் அமைப்பது, எரிசக்தித் திட்டங்கள், நீர் வழித் தடங்களை ஒட்டிய உள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது ஆகியவை முக்கியமானவை.இவற்றைச் செயல்படுத்த, மத்திய – மாநில அரசுகள், ஒப்பந்த அடிப்படையில் தனியாரைப் பயன்படுத்தும்.
அப்படிப்பட்ட ஒரு உள்கட்டுமான ஒப்பந்ததாரர் தான், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., என்ற, ‘இன்ப்ராஸ்ட்ரக்சர் லீசிங் அண்டு பைனான்ஷியல் சர்வீசஸ்’ நிறுவனம்.கடந்த, 1987ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், எல்.ஐ.சி., சென்ட்ரல்பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை, 40 சதவீதத்துக்கு மேல் பங்குகளை வைத்துள்ளன.இந்த நிறுவனம் தான் இப்போது புயலின் மையமாக மாறியுள்ளது.
காரணம் என்ன?
முதலில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை புரிந்துகொள்வோம். அரசின் நீண்ட கால திட்டங்களை நிறைவேற்றித் தரும் இந்நிறுவனம், லாபத்தையும் நீண்ட கால அளவிலேயே பெறும்.அதாவது, ஒரு எக்ஸ்பிரஸ் சாலையை அமைத்துத் தந்து, அதன் டோல்கேட்டுகளை நிர்வகித்து, இதற்காக தான் செய்த முதலீட்டை, லாபத்தோடு திரும்ப எடுத்துக்கொள்ள, 25 முதல், 30 ஆண்டுகள் வரை ஆகலாம். இத்தகைய திட்டங்களுக்கு ‘பப்ளிப் பிரைவேட் பார்ட்னர்ஷிப்’ என்று பெயர்.
இத்துறையில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., தான் முன்னோடி என்று, அந்நிறுவனம் மார்தட்டிக் கொள்கிறது.வருவாய் தாமதமாக வரும், ஆனால் முதலீட்டை இப்போதே செய்தாக வேண்டும். நீண்ட கால திட்டங்கள் எல்லாமே இத்தகைய அணுகுமுறையோடு தான் நடைபெறுகின்றன.தன் திட்டங்களுக்குத் தேவைப்படும் முதலீடுகளைத் திரட்ட, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., எண்ணற்ற குறுகிய கால கடன் பத்திரங்களை வெளியிட்டுஉள்ளது.
அதேபோல், பல்வேறு தனிப்பட்ட நிறுவனங்களிடமிருந்தும் கடன் பெற்றுள்ளது. அரசு சார்ந்த அமைப்புகள் எல்லாம் இந்நிறுவனத்தில் தான் முதலீடு செய்துள்ளன.எல்லாமே நம்பிக்கை தான். ஆனால், திடீரென ஒரு நாள் நம்பிக்கை பொய்த்துப் போனது.சிறு தொழில் வளர்ச்சி வங்கி என்ற, சிட்பிக்கு, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., வழங்க வேண்டிய, 250 கோடி ரூபாய் முதிர்வுத் தொகை திரும்ப வராதபோது தான், பிரச்னை வெடித்தது.
இது நடந்தது ஆகஸ்டு மாதம். உடனே, அடுத்தடுத்து, பல்வேறு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய வட்டிகளும், முதிர்வுத் தொகைகளும் தள்ளாட்டம் காண ஆரம்பித்தன. குறிப்பாக, கடன் பத்திரங்கள் சந்தை அதிர்ச்சி அடைந்தது.அப்போது தான், 91 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற, விபரம் வெளியானது.
கடன் சந்தையில் ஏற்பட்ட அதிர்ச்சி, பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. வங்கியல்லாத நிதிச் சேவையை வழங்கும் நிறுவனங்களும், உள்கட்டுமான நிறுவனங்களும் ஆட்டம் கண்டன. இத்துறையைச் சேர்ந்த பங்குகள் கடும் விலை வீழ்ச்சியை கண்டன.ஒரு நிறுவனத்தில் தொடங்கிய பாதிப்பு, மொத்த துறையையும் பீடிக்கத் தொடங்கியது. அதாவது, இவ்வளவு பெரிய, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனமே மாட்டிக்கொண்டு தவிக்குமானால், மற்ற நிறுவனங்கள் எல்லாம் எம்மாத்திரம் என்ற கண்ணோட்டம் தான்!
சரிவு என்பது தொற்று நோய். கடுமையாகப் பரவுவதற்கு முன், அதைக் கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற, கோரிக்கை வைக்கப்பட்டது.உடனே மத்திய அரசு, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிர்வாகக் குழுவைக் கலைத்துவிட்டு, உதய் கோட்டக் தலைமையில், மற்றொரு குழுவை நியமித்துள்ளது.
இந்தப் புதிய குழு, சென்ற வாரம், முதல் கூட்டத்தைக் கூட்டியது.அவர்கள் வெளியே தெரிவித்த தகவல்கள் தான் இன்னும் பயங்கர ரகம்.அதாவது, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., என்பது, 348 துணை நிறுவனங்களோடு செயல்பட்டுள்ளது. இவற்றுக்கு இடையேயான வர்த்தக உறவுகள் மிகச் சிக்கலானவை. ஒவ்வொன்றும் வங்கிகளிடம் இருந்தும், பல்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன்களைப் பெற்றுள்ளன.கடன்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தால், 91 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கலாம் என்பது, இந்தப் புதிய குழுவின் கணிப்பு.
பிரச்னையின் மையம்
நீண்ட காலத் திட்டங்களுக்கு, குறுகிய கால கடன்கள் வாங்கியது தான் முதல் தவறு. அதுவும், ‘மறைமுக பேங்கிங்’ என்று சொல்லப்படும் வங்கியியல் முறை ஒன்று, உலகம் முழுவதும் உள்ளது. அது, குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டும் நடைமுறை.ஐ.எல்., அண்டு எப்.எஸ்., இத்தகைய நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து ஏராளமாக கடன் பெற்றுள்ளது. விளைவு, பிரச்னை ஏற்பட்டபோது, அதனால், வட்டியையோ, முதிர்வுத் தொகையையோ திருப்பிச் செலுத்த முடியவில்லை.
பிரச்னை ஏன் ஏற்பட்டது?
பல திட்டங்களில் கால தாமதம் முக்கியமானது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசின் சட்டத்தால் பல இடங்களில் கூடுதல் தொகை கொடுத்து நிலங்களைக் கையகப்படுத்த வேண்டிய நிலை. முடித்துக் கொடுத்த திட்டங்களுக்கு, அரசிடம் இருந்து வர வேண்டிய தொகையில் சுணக்கம்.எல்லாவற்றுக்கும் மேல், வங்கிகளிடம் இருந்து சரளமாக கிடைத்து வந்த கடன்கள், வாராக்கடன் பிரச்னைக்குப் பிறகு, மொத்தமாக நின்றுவிட்டன.
அதனால், ஆட்டைத் துாக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் துாக்கி கழுதையில் போட்டு... என்று ஆடிய கள்ளாட்டம் வெளியே வந்துவிட்டது.தற்போது புதிய நிர்வாகக் குழு முன், மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. சொத்துகளை விற்று அல்லது திட்டங்களை மறுசீரமைத்து, எப்படியேனும் இந்நிறுவனத்தை மீட்க வேண்டும்.
அதேபோல், அரசும் ஏதேனும் ஒரு வகையில், நிதி உதவி செய்து, இந்நிறுவனத்தை நிலைநிறுத்த வேண்டும். இல்லையெனில், சரிவு என்ற தொற்று நோய், கொள்ளை நோயாகவும் மாறிவிட வாய்ப்புண்டு.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|