பதிவு செய்த நாள்
29 டிச2018
04:30

புதுடில்லி : நுகர்வோருக்கு தரமான, பாதுகாப்பான உணவு வகைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வலைதள உணவு சேவை நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.
‘குரோபர்ஸ், பிக்பேஸ்கட்’ போன்ற வலைதள சந்தை நிறுவனங்கள், காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை, நுகர்வோர் வீட்டிற்கே சென்று கொடுக்கின்றன. அதுபோல, ‘ஸ்விக்கி, ஸொமாடோ’ போன்ற வலைதள சந்தை நிறுவனங்கள், உணவு வகைகளை சப்ளை செய்கின்றன.
கண்காணிப்பு :
இந்த வலைதள சந்தை நிறுவனங்கள், உணவகங்களுக்கும், நுகர்வோருக்கும் இடையே பாலமாக செயல்பட்டு, குறிப்பிட்ட கட்டணத்தை பெறுகின்றன. இது போன்ற நிறுவனங்களின் சேவை குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து, உணவுப் பொருட்கள் வினியோகம் தொடர்பான விதிமுறைகளை, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் கடுமையாக்கியுள்ளது.
இது குறித்து, ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, பவன் அகர்வால் கூறியதாவது: நுகர்வோர், வலைதள சந்தை நிறுவனங்கள் மூலம் உணவு வகைகளை வாங்குவது அதிகரித்து உள்ளது. அதனால், நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்ய, கண்காணிப்பு நடைமுறைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வலைதள சந்தை நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வழியில், எங்கு வேண்டுமென்றாலும், உணவின் மாதிரியை சோதனை இடலாம். நிறுவனங்கள், நுகர்வோர் குறிப்பிடும் உணவுகள் குறித்த படங்களை, அவற்றின் வலைதளத்தில் வெளியிட வேண்டும்
காலாவதி காலம் :
உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சட்ட விதிமுறைகளை, வலைதள சந்தை நிறுவனங்கள், நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனங்கள், புதிய உணவுகளையே, நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என, விதிமுறை கூறுகிறது.
உணவுப் பொருட்கள் சப்ளை செய்யப்படும் போது, அப்பொருட்களின் எஞ்சிய காலாவதி காலம், 30 சதவீதமாகவோ அல்லது, 45 நாட்களுக்கு முன்னதாகவோ இருக்க வேண்டும். அதாவது, ஒரு உணவுப் பொருளின் காலாவதி காலம், 60 நாட்கள் என வைத்துக் கொண்டால், அதன் சப்ளை, 15 நாட்களுக்குள் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை, வலைதள சந்தை நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விதிமுறைகள்:
* உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வழியில் சோதனை
* வலைதளத்தில், ‘ஆர்டர்’ செய்யும் உணவின் படம் இருக்க வேண்டும்
* உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு சட்ட விதிகளை, நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும்.
* புத்தம் புதிய உணவுப் பொருட்கள் மட்டுமே நுகர்வோருக்கு வழங்க வேண்டும்
* உணவுப் பொருட்களை, காலாவதி ஆவதற்கு, 45 நாட்களுக்கு முன் சப்ளை செய்ய வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்பு முக்கியம்:
நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை வரவேற்கிறோம். உணவு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. உணவகங்களில் இருந்து, நுகர்வோருக்கு உணவு சப்ளை செய்வது வரையில், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். தரமற்ற உணவு வகைகள் சப்ளை செய்த, 1,000த்திற்கும் அதிகமான உணவகங்களை, வலைதளத்தில் இருந்து சமீபத்தில் நீக்கியுள்ளோம்.
-ஸொமாடோ நிறுவனம்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|