பதிவு செய்த நாள்
25 ஜன2019
07:07

புதுடில்லி: ‘சர்வதேச அளவுகோல்படி, ரிசர்வ் வங்கியிடம், போதிய மூலதனமோ, மத்திய அரசுக்கு தரக் கூடிய அளவிற்கு உபரி நிதியோ இல்லை’ என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியிடம், 2018, ஜூன் நிலவரப்படி, உபரியாக, 9.33 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. இதில், 25 சதவீதத்தை வழங்கினால், பொதுத் துறை வங்கிகள் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, தாராளமாக கடன் தரலாம் என, மத்திய அரசு யோசனை தெரிவித்தது.
இது தொடர்பான மோதல் காரணமாக, கடந்த மாதம், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து, உர்ஜித் படேல் விலகினார்.ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக, சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றார். இதனிடையே, ரிசர்வ் வங்கியின் உபரி நிதி வரம்பு உள்ளிட்டவை தொடர்பான விதிமுறைகளை ஆய்வு செய்ய, உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அதன் அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.
இந்நிலையில், ‘ரிசர்வ் வங்கியிடம் அளவிற்கு அதிகமான உபரி நிதி இல்லை’ என, பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை பேராசிரியரும், மும்பையைச் சேர்ந்த, முன்னோடி நிதி ஆய்வு மற்றும் பயிற்சி மைய இயக்குனருமான, அமர்த்தியா லஹரி தெரிவித்துள்ளார்.
ஆலோசனை:
அவர், ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரல் ஆச்சார்யா, அவ்வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் ஆகியோருடன் ஆலோசித்து, மேலும் சில வல்லுனர்களுடன் இணைந்து, ஆய்வறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில், 45 நாடுகளைச் சேர்ந்த, மத்திய ரிசர்வ் வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.அதில், அவ்வங்கிகளின் சொத்துக்கு ஈடான சராசரி மூலதனம் மற்றும் மறுமதிப்பீடு செய்த நிகர மூலதனத்திற்கு இடையிலான விகிதாச்சாரம், 6.56 சதவீதமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது, வளரும் நாடுகளுக்கு, 6.96 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கிக்கு, 6.60 சதவீத அளவிற்குத் தான் உள்ளது.
அதனால், சர்வதேச மத்திய வங்கிகளுடன் ஒப்பிடும் போது, ரிசர்வ் வங்கியின் மூலதன இருப்பு, உபரியாக இல்லை; இருக்க வேண்டியதை விட, சற்று குறைவாகவே உள்ளது புலப்படுகிறது.எனவே, ரிசர்வ் வங்கி, அதன் செயல்பாடுகள் மூலம் இழப்பை சந்திக்க நேர்ந்தால், சுயாட்சி தன்மையை விட்டுக் கொடுத்து, மத்திய அரசிடம் தான் நிதியுதவியை எதிர்பார்க்க நேரிடும்.
இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை, நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கு, அதன் செயல்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளவும், இடர்ப்பாடுகளை சமாளிக்கவும், அதிக மூலதன பாதுகாப்பு தேவைப்படும்.
நம்பகத்தன்மை:
உலக நாடுகளில், ஆளும் அரசுகள், மத்திய ரிசர்வ் வங்கிகளின் மேல் ஆதிக்கம் செலுத்துபவையாக உள்ளன.அதனால் அவை, ரிசர்வ் வங்கிகளுக்கு ஏதேனும் அவசர நெருக்கடி ஏற்பட்டால், மூலதன உதவி உள்ளிட்ட வழிகள் மூலம், கைகொடுத்து காப்பாற்றுகின்றன. இத்தகைய சூழலில், ‘ரிசர்வ் வங்கிகள் ஏன் அதிக அளவில் மூலதன இருப்பை பராமரிக்க வேண்டும்’ என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கு ஒரே பதில் தான் கூற முடியும். பொதுமக்களின் நிதிப் பரிவர்த்தனைகளை பாதுகாக்கும், உயரிய கண்காணிப்பு அமைப்புகளாக ரிசர்வ் வங்கிகள் உள்ளன. அவை, நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் பட்சத்தில், அவற்றின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விடும். எந்த அளவிற்கு ரிசர்வ் வங்கி பலமாக உள்ளதோ, அந்த அளவு, அதன் மீதான நம்பகத்தன்மையும் அதிகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|