பதிவு செய்த நாள்
24 பிப்2019
23:33

பொதுத்துறை வங்கிகளை, கடன் சுமையில் இருந்து மீட்பதற்காக, மத்திய அரசு இம்முறை பெரும் தொகையைஒதுக்கியுள்ளது. அதனால், வங்கிகள் மீண்டும் புத்துணர்ச்சி பெறுமா?
இந்த நிதியாண்டில், மத்திய அரசு, 12 பொதுத் துறை வங்கிகளில், 48 ஆயிரத்து, 239 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருக்கிறது. இதில், அதிக பட்சமாக கார்ப்பரேஷன் வங்கி, 9,086 கோடி ரூபாயும்; அலகாபாத் வங்கி, 6,896 கோடி ரூபாயும் பெறவிருக்கின்றன.பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகியவையும் கணிசமான மறுமூலதனத்தை பெறஉள்ளன.
உற்சாக காரணங்கள்:
இந்த அறிவிப்பு வெளியானவுடனேயே, பங்குச் சந்தைகளில் ஒரே உற்சாகம். வங்கித் துறை பங்குகளின் விலைகள் பர பரவென உயரத் துவங்கின. அதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள்.வங்கிகளுக்கு கூடுதல் பணம் வருமானால், அதன் மூலம், வங்கிகளின் கடன் கொடுக்கும் சக்தி அதிகரிக்கும். தொழில் வளரும்; வருவாய் பெருகும்; லாபம் அதிகரிக்கும்.
ரிசர்வ் வங்கியான, ஆர்.பி.ஐ., வகுத்த உடனடி சீர்திருத்த நடவடிக்கை பட்டியலில் இருந்து, இந்த வங்கிகள் வெளியே வரும். கூடுதல் கிளைகளைத் திறப்பதோ, சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதோ சாத்தியமாகும். சுதந்திரமாக இயங்குவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். வாராக்கடன்களால் திண்டாடிக் கொண்டு இருந்த, பொதுத் துறை வங்கிகள் இவை.
ஒவ்வொரு காலாண்டும், தம் எதிர்கால வாராக்கடன்களை மனதில் கொண்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைக்க வேண்டிய நிலையும் இவற்றுக்கு இருந்தன. அதேபோல், வாராக்கடன் வைத்துள்ள நிறுவனங்களை சட்ட ரீதியாக அணுகி, அவற்றிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெரிய அளவு வெற்றி இல்லையெனினும், ஓரளவுக்கு பணம் திரும்ப வந்திருப்பது உண்மை.
ஆர்.பி.ஐ.,க்கு புதிய கவர்னர் வந்த பின், நிலைமை கொஞ்சம் சுலபமாகியுள்ளது. முன்னர் காட்டப்பட்ட கடுமை தற்போது தளர்ந்துள்ளது. வாராக்கடன் மீதான பார்வை, மத்திய அரசுக்கும், ஆர்.பி.ஐ.,க்கும் மாறியுள்ளது.வங்கிகளை முடக்குவதாலோ, நெறிப்படுத்துவதாலோ கிடைக்கக்கூடிய பலன்களைவிட, தொழில் துறைக்கும், எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கும் மறுக்கப்படும் கடன் வசதியால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம் என்பதை, இவர்கள் புரிந்து கொண்டு உள்ளனர்.
வேலைவாய்ப்ப்புகளும், பணப்புழக்கமும், சுபிட்ச உணர்வும் இதனால் தேங்கிப் போய் விடுகின்றன.அதனால் தான், நிதி மறுமூலதனத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.இதனால், நிலைமை சீராகிவிட்டதாக பொருளல்ல. மாறாக, நாம் இந்த பாதிப்புகளைப் பார்க்கும் பார்வை, மாறியுள்ளது என்பதே அர்த்தம். லோக்சபா தேர்தல் காலம் என்பதால், இந்த மன மாற்றமா என்ற கேள்வி எழத்தான் செய்யும்.ஆனால், இன்னொரு வகையில், நாம் கூடுதல் தைரியம் பெற்றுள்ளோம்; நிலைமைகளை சமாளித்துவிட முடியும் என்ற துணிச்சல் ஏற்பட்டுள்ளது என்றும், இதை எடுத்துக் கொள்ளலாம்.
தயாரிப்புகள் சரியா?
வாராக்கடன்கள் ஏன் அதிகரித்தது என்பதைப் பற்றிய தெளிவு, தற்போது நம் வங்கி துறைக்கு கிடைத்திருக்கும். எங்கெல்லாம் ஓட்டைகள் உள்ளன, அவற்றை கடன் பெறுபவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்வர் என்ற, சூட்சுமமும் தெரிந்திருக்கும்.கடனைத் திருப்பி வசூலிக்கும் போது, சந்திக்கும் இடர்கள் என்ன என்பதையும் அவர்கள் கற்றுக் கொண்டிருப்பர். அரசியல் தலையீடுகளும், உயர் அதிகாரிகளின் நெகிழ்வான போக்குகளும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளையும், வங்கி துறை உணர்ந்திருக்கும்.
இப்போது, மீண்டும் இத்தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். விருப்பு, வெறுப்பு இல்லாமல், திட்டங்களின் தகுதியை மட்டுமே சீர்துாக்கிப் பார்த்து, கடன்கள் வழங்கப்பட வேண்டும்.கொடுக்கப்படும் தொகைக்கு நிகரான அடமானங்கள் பெறப்பட வேண்டும். இன்னும் என்ன வெல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையோ, அவை அனைத்தையும் பெற்றுக் கொண்டே, கடன்கள் வழங்கப்பட வேண்டும்.வங்கி துறைகள் பணம் ஏராளமாகப் பாய்கிறது என, அதை அத்தனை பேருக்கும் வாரி வழங்கும் போக்கு தடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும், நாம் இந்த தவறை செய்கிறோம்.
இரண்டு பாதிப்புகள்:
கடைசியில் இரண்டு முனைகளில் பாதிப்பு ஏற்படுகிறது.பொதுத்துறை வங்கிகள் என்றாலே லாபம் ஈட்ட தகுதியற்றவை, அரசின் கைப்பாவை என்ற அவப்பெயர் ஏற்பட்டுவிடும். நீண்ட கால அளவில் பொதுத் துறை வங்கிகளே வேண்டியதில்லை; அவற்றை ஒருங்கிணைத்து, பெரிய வங்கியாக மாற்றி விடுவோம் என்ற கோஷங்கள் எழும்.இதன் அர்த்தம், அவை திறமையாகச் செயல்படவில்லை என்பது தான். திறமையாகச் செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, அப்போது யார் காதுகளிலும் ஏறாது.
மற்றொன்று, இது பொதுமக்களின் பணம். ஒவ்வொரு முறையும் வங்கித் துறை மீதான நம்பிக்கை சிதைவைச் சந்திக்கும் போதெல்லாம், மத்தியமர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஓய்வூதியர்களும், சிறு முதலீட்டாளர்களும் பதறிப் போகின்றனர். நடுவில் வங்கிகளைக் காப்பாற்றுவதற்கு, வங்கிகளில் உள்ள சேமிப்புகளே பயன்படுத்தப்படலாம் என்ற செய்தி வெளியான போது, எத்தனை பேர் நடுங்கிப் போயினர் என்பதை நினைத்துப் பாருங்கள்.
இத்தகைய எச்சரிக்கைகளை, பொதுத் துறை வங்கிகள் கவனத்தில் கொள்ளாமல் போனால், அவற்றின் முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக இராது. அவற்றில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் அஸ்தமித்துவிடும்; நாட்டுக்கே பெருந்தீங்கை இழைத்தவர்களாகி விடுவோம்.பொதுத் துறை வங்கிகளுக்கு தற்போது தேவை, கவனம் மட்டுமே. ஒவ்வொரு முறை சரியும் போது, அரசு வந்து காப்பாற்றாது. அதற்கான காலம் மலையேறிக் கொண்டு இருக்கிறது. வங்கி துறை என்பது இனிமேலும் தர்ம சத்திரமல்ல, அது, லாபமீட்ட வேண்டிய தொழில்.
மறுமுதலீடு செய்யும் அரசு, ஒவ்வொரு பொதுத் துறை வங்கியின் கடிவாளத்தையும் இழுத்துப் பிடிக்க வேண்டும். நோய் நாடி, நோய் முதல் நாடி என்பது போல், கடன்களின் தரத்தை மிகக் கறாராக நிர்ணயம் செய்ய வேண்டும்.தற்போது புண்ணுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. புண் புரையோடி, காலையே வெட்டிவிட வேண்டிய அவசியம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது வங்கிகளும், ஆர்.பி.ஐ.,யும் தான்.
-ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|