பதிவு செய்த நாள்
05 மே2019
23:44

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய், தொடர்ந்து, இரண்டாவது வாரமாக, விலை சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
கடந்த
வாரம், 1 பேரலுக்கு, 4 டாலர் விலை சரிந்து, தற்போது, 1 பேரல், 61.50
டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம்,
ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில், கடந்த வாரம் வெளியான
பொருளாதார காரணியான, தொழில் துறை வளர்ச்சி குறியீடு, எதிர்பார்த்ததை
விட சற்று குறைவாக வந்தது.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு
இடையேயான வர்த்தக மோதல் குறித்த சமரச பேச்சில், எந்தவித
முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவ்விரு காரணங்களால், பொருளாதார
வளர்ச்சி மொத்தமாக மந்தமடையும் சூழல் ஏற்படும் என,
கருதப்படுகிறது.இந்நிலையில், கச்சா எண்ணெயின் தேவை குறையும் எனக் கருதியதன் காரணமாக, விலை சரிவு நிகழ்ந்தது.
வெனிசுலா,
ஈரான் ஆகிய நாடுகளின் மீது, அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதார தடை
காரணமாக, அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிப்படைந்து
வருகிறது. மேலும், இந்த நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யும்
நாடுகளையும், அமெரிக்கா எச்சரித்து வருகிறது.
இதையடுத்து,
உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் உற்பத்தி
நாடுகளின் கூட்டமைப்பான, ‘ஒபெக்’ உற்பத்தியை குறைத்து, விலை சரிவை
கட்டுப்படுத்த முயன்று வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவின்,
ஷெல் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி,
தற்போது இந்நாட்டின் எண்ணெய் இருப்பு அளவும், இரண்டு ஆண்டு
சராசரிக்கும் மேலாக உள்ளது. இத்தகைய சூழல், கச்சா எண்ணெய் விலை
உயர்வை கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா
எண்ணெய் வரத்து குறையும் என்று எதிர்பார்த்து வந்த சூழலில், கடந்த
வியாழன் அன்று, அமெரிக்க எண்ணெய் அமைச்சகம் வெளியிட்டுள்ள
தகவலில், உற்பத்தி, 8 மில்லியன் பேரல்கள் உயர்ந்துள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது. இது, இரு மாத உச்சம் என்றும்
தெரிவித்துள்ளது.
சமீப காலமாக, அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி
அதிகரித்து வருகிறது. ஷெல் எண்ணெய் உற்பத்தியையும் சேர்த்து
பார்க்கும் போது, உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில்,
முதலிடத்தை பிடித்துள்ளது அமெரிக்கா. இரண்டாவதாக சவுதி
அரேபியாவும், மூன்றாவதாக ரஷ்யாவும் உள்ளது. அமெரிக்காவில்
இயங்கி வரும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து
அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, 892 குழாய்கள் செயல்பட்டு
வருகின்றன.
சவுதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய
நாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், ஒட்டுமொத்த
உலகின் நுகர்வு தேவையில், 60 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
சவுதி
அரேபியாவின் தினசரி உற்பத்தி, மே மாதத்தில், 10 பில்லியன்
பேரல்கள் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஒபெக்
ஒப்பந்த குறைப்பில், அந்நாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ள அளவான, 10.3
பில்லியன் பேரல்கள் என்பதை விட குறைவாகும்.
தங்கம் வெள்ளி
கடந்த
வாரத்தின் ஆரம்ப நாட்களில், சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும்
வெள்ளி ஆகியவை விலை குறைந்து வர்த்தகம் ஆன போதிலும், வார இறுதி நாளான
வெள்ளியன்று, விலை அதிகரித்து, வர்த்தகம் ஆனது.
மார்ச், 8ம் தேதிக்கு பின் ஏற்பட்ட அதிக அளவிலான, ஒரு நாள் உயர்வு இதுவே ஆகும்.
கடந்த
புதன்கிழமை அன்று, வட்டி விகித கொள்கை குறித்து நடைபெற்ற, அமெரிக்க
மத்திய வங்கியின் கூட்டத்தில், வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை
என, அறிவிக்கப்பட்டது.அடுத்து, அமெரிக்காவின், முக்கிய
பொருளாதார காரணிகளில் ஒன்றான, விவசாயம் சாராத அரசு துறைகளில்,
புதிதாக பணியில் நியமிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம், கடந்த
வாரம் வெளியானது.
அதில், எதிர்பார்த்ததை விட அதிகமானவர்கள்
நியமிக்கப்பட்டிருந்தனர். ஒரு பக்கம் பணவீக்க விகிதம் உயர்ந்து
வருகிறது. இன்னொரு பக்கம், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு
இடையேயான வர்த்தக மோதல் போக்கு காரணமாக, வரும் காலங்களில் அரசு,
வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு எடுக்கும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.இது போன்ற காரணங்களால், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை, வார இறுதி நாளில் உயர்ந்து வர்த்தகம் ஆனது.
ஐரோப்பிய
ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக சரிந்துள்ளது.
இதனால், முதலீட்டு ஆர்வம் தங்கம் மீது அதிகரித்துள்ளது. மேலும்,
கடந்த ஆண்டில், உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளின் மத்திய
வங்கிகள், தங்கம் கொள்முதலை அதிகரித்துள்ளன. இதனால், விலை
அதிகரித்தது.இருப்பினும், இவ்விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்படலாம்.
நாட்டில்,
அட்சய திரிதியை பண்டிகையை ஒட்டி, முதலீட்டு ஆர்வம் மற்றும்
நுகர்வோர் வாங்கும் திறனைப் பொறுத்து, இந்நாளில் தங்கத்தின்
கொள்முதல் அமையும்.உலக தங்க கவுன்சில் கருத்துப்படி,
நடப்பாண்டின் முதல் காலாண்டில், அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான
காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த தேவை, 5 சதவீதம் உயர்ந்து, 189
டன் ஆக இருந்தது. மேலும், நடப்பு ஆண்டின் மொத்த இறக்குமதி, 750 முதல்,
800 டன்னாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த, 10
ஆண்டுகளில் சராசரி தங்க இறக்குமதியானது, 838டன்.
செம்பு
கடந்த
சில வாரங்களாகவே, செம்பு விலை குறைந்து வருகிறது. அமெரிக்க
நாணயத்தின் மதிப்பு உயர்ந்தது, இதற்கு முக்கியமான காரணங்களில்
ஒன்றாகும்.
சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக
மோதல் காரணமாக, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி
பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், செம்பு உள்ளிட்ட தொழிற்சாலை
மூலப்பொருட்களான, இரும்பு, துத்தநாகம், கார்பன் போன்ற அனைத்தும்
விலை சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
மேலும், லண்டன் பொருள் வாணிப
சந்தையில், தொழிற்சாலைகளின் குறியீட்டு எண் குறைந்துள்ளது. 2015ம்
ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, 3 சதவீதத்துக்கு மேல்
குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செம்பு சுரங்கத்
தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்த பேச்சில், சுமூகமான
உடன்பாடு ஏற்படும்; வேலைநிறுத்தம் கைவிடப்பட்டு, இயல்பு நிலை
திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அசாதாரண சூழல்
விலகாததால், நுகர்வு தேவை குறையும் என்ற கருத்து, விலை சரிவுக்கு
காரணமாக அமைந்தது.
உலகில், செம்பை அதிக அளவில் தொழிற்சாலைக்கு
பயன்படுத்தும் நாடு சீனாவாகும். அந்நாட்டின் பொருளாதார
வளர்ச்சியை முன்வைத்தே, பொருட்களின் விலை மதிப்பு நிர்ணயம்
செய்யப்படுகிறது.தற்போதைய சூழலில், சீனாவின் மொத்த உள்நாட்டு
உற்பத்தி வளர்ச்சி குறையும் என்ற அச்சம் காரணமாக, செம்பு விலை சரிந்து
வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|