பதிவு செய்த நாள்
22 மே2019
07:10

புதுடில்லி: கடந்த நிதியாண்டில், வருவாய் ஈட்டியதில், முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பொதுத் துறையைச் சேர்ந்த, ஐ.ஓ.சி., நிறுவனத்தை விஞ்சியுள்ளது.
இதன் மூலம், நாட்டின் மிகப் பெரிய நிறுவனமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவெடுத்துள்ளது. கடந்த, 2018-–19ம் நிதியாண்டில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் விற்றுமுதல், 6.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே நிதியாண்டில், ஐ.ஓ.சி., எனப்படும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் விற்றுமுதல், 6.17 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம், ஐ.ஓ.சி.,யை விட இரு மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில், ரிலையன்ஸ், 39ஆயிரத்து 588 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, 2017-–18ம் நிதியாண்டில் ஈட்டிய, 34 ஆயிரத்து 988 கோடி ரூபாயை விட, 13 சதவீதம் அதிகம். இதே காலத்தில், ஐ.ஓ.சி.,யின் நிகர லாபம், 23 சதவீதம் குறைந்து, 22ஆயிரத்து189 கோடி ரூபாயில் இருந்து, 17 ஆயிரத்து 274 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
சுத்திகரிப்பு:
ரிலையன்ஸ், சந்தை மூலதன மதிப்பிலும், ஐ.ஓ.சி.,யை விஞ்சியுள்ளது. ஐ.ஓ.சி., கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் மற்றும் எரிவாயு விற்பனை உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த ஆண்டு வரை, மிக அதிக அளவில் லாபமீட்டும் நிறுவனமாக திகழ்ந்தது. ஆனால், இந்த சிறப்பை, 2018- – 19ம் நிதியாண்டில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வரும், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திடம் இழந்தது.
ஓ.என்.ஜி.சி., கடந்த முழு நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. இருந்தபோதிலும், ஏப்., – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், 22 ஆயிரத்து 671 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, ஐ.ஓ.சி., முழு நிதியாண்டில் ஈட்டிய நிகர லாபத்தை விட, அதிகம்.
மூன்று பிரிவுகள்:
வருவாய், லாபம் மற்றும் சந்தை பங்கு மூலதனத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.ஓ.சி.,யை விஞ்சி உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ், எண்ணெய் சுத்திகரிப்பிலும், சில்லரை விற்பனையிலும், அதிக லாப வரம்புடன் வர்த்தகம் புரிகிறது. இதனால், 2009–19 வரையிலான, பத்து ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் ஆண்டு, சராசரி வருவாய் வளர்ச்சி, 14 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இதே காலத்தில், ஐ.ஓ.சி.,யின் வருவாய், 20 சதவீதத்தில் இருந்து, 6.3 சதவீதமாக குறைந்துள்ளது. உலகில், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள, சவுதி அரேபியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து, இந்தியாவில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய உள்ளது.
கையிருப்பு:
கடந்த நிதியாண்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு, 1.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதேகாலத்தில், இந்நிறுவனத்தின் கடன், 2.87 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேசமயம், இதே காலத்தில், ஐ.ஓ.சி.,யின் நீண்ட கால கடன், 92 ஆயிரத்து 700 கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|