பதிவு செய்த நாள்
24 ஜூலை2019
07:14

புதுடில்லி: ‘பேமென்ட்ஸ் வங்கிகளின் வளர்ச்சிக்கு, அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஆதரவு தேவை’ என, எஸ்.பி.ஐ., அறிக்கை தெரிவித்துஉள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பேமென்ட்ஸ் வங்கிகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறது. ஆனாலும், காலப்போக்கில், இந்த வணிகம் விரிவு பெறும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஆதரவு, இவற்றுக்கு தேவைப்படுகிறது.கடந்த, 2014ல், மொத்தம், 11 நிறுவனங்களுக்கு, பேமென்ட்ஸ் வங்கி துவங்க, உரிமம் வழங்கப்பட்டது. ஆனால், அவற்றில், நான்கு வங்கிகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கின்றன.இத்தகைய வங்கிகள், அதன் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் குறித்த கடுமையான விதிமுறைகளால் தடுமாறுகின்றன.
இந்த வங்கிகளுக்கு, கடன் கொடுக்க, அனுமதி வழங்கப்படவில்லை. இவற்றால் வைப்புத் தொகையாக, 1 லட்சம் ரூபாயை மட்டுமே ஏற்றுக்கொள்ள இயலும்.இவற்றுக்கு கடன் அபாயங்கள் இல்லை என்றாலும் கூட, இவற்றின் மூலதனத் தேவை, மிக அதிகமாக இருக்கிறது.இவை, பெரிய வங்கிகளுக்கு போட்டியாக மாறுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை. இந்த வங்கிகளுக்கு, ‘ஆதார்’ அடிப்படையிலான, கே.ஒய்.சி., எனும் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்வதற்கான அனுமதியை வழங்கலாம்.
தற்போது இவை, நேரிடையாக வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை கேட்டு பெறுகின்றன. ஆதார் மூலமாக வாடிக்கையாளர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வசதியுடன் ஒப்பிடும்போது, தற்போது, மூன்று மடங்கு அதிகமாக செலவு செய்கின்றன. இந்த செலவுகள் குறைவதற்கு, ஆதார் தகவல்களை அணுகுவதற்கு, இவற்றுக்கு அனுமதி வழங்கலாம். மேலும், பிற சேவை நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, பரஸ்பர சேவைகளை விற்பதற்கு, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்க வேண்டும்.
ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான பணத்தை, டிஜிட்டல் முறையில் தானாக இருப்பில் செலுத்த, பிற பெரிய வங்கிகளின் மூலம் வசதிகளை பெற அனுமதித்தால், அதுவும் இவற்றின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நோக்கம்:
வருவாய் குறைந்த பிரிவினர்களான, கூலித் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், அமைப்பு சாரா துறை தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு, வங்கி சேவை வாய்ப்புகளை வழங்கும் பொருட்டும், அனைவருக்கும் வங்கி சேவை வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற, அரசு கொள்கை அடிப்படையிலும், இந்த பேமென்ட் வங்கிகள் துவங்கப்பட்டன. ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். கிரெடிட் கார்டு வசதி கிடையாது. ஆனால், டெபிட் கார்டு கிடைக்கும். இந்த வங்கிகள் கடன் வழங்குவது போன்ற சேவைகள் எதிலும் ஈடுபட, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அனுமதிக்கவில்லை.
மூடப்படும் வங்கிகள்:
அண்மையில், ‘ஆதித்ய பிர்லா ஐடியா பேமென்ட்ஸ் வங்கி’ அக்டோபர் மாதத்துடன் வங்கியை மூடப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, இந்த மாத துவக்கத்தில், ‘வோடபோன் எம் – பைசா’ நிறுவனமும் சேவையை நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|