பதிவு செய்த நாள்
25 நவ2019
02:40

டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து நீங்கள் பயன்படுத்தும் அலைபேசி சேவைகளின் கட்டணங்கள், 67 சதவீதம் உயரப் போகின்றன. இணைய பயன்பாட்டின் கட்டணங்கள், 20 சதவீதம் உயரப் போகின்றன.
இனிமேல் சல்லிசான ரேட்டில் அலைபேசிகளைப் பயன்படுத்தும் காலம் முடிந்துவிட்டது. டிசம்பர் 1 முதல், ஏர்டெல்லும், வோடபோனும் கட்டணங்களை உயர்த்தப் போகின்றன. ஜியோவும் இன்னும் சில வாரங்களில் கட்டணங்களை உயர்த்தப் போவதாகத் தெரிவித்துவிட்டது.
என்ன காரணம்?
இதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள்.ஒரு அலைபேசியில் இருந்து இன்னொரு அலைபேசிக்கு இணைப்புகொடுப்பதற்கான கட்டணம் தற்போது, 6 பைசாவாக இருக்கிறது. இதேபோல், டேட்டா சேவையில், 1 ஜி.பி.,க்கு தற்போது, 2.3 ரூபாய் முதல், 6 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.இன்றைய தேதியில் இத்தகைய கட்டணங்கள் சாத்தியமே இல்லை என தெரிவித்துள்ளன அலைபேசி நிறுவனங்கள்.மின்சாரம், அலைபேசி கோபுரங்களின் வாடகை, அலைக்கற்றை கட்டணம் ஆகியவை பன்மடங்கு உயர்ந்துகொண்டே போகும்போது, தங்களால் இனி குறைந்த கட்டணத்தில் சேவைகளைத் தர முடியாது என தெரிவித்துள்ளன.
இனிமேல், அலைபேசிகளை இணைக்கும் கட்டணம், 6 பைசாவில் இருந்து, 10 பைசாவாகவும், டேட்டா கட்டணம், 1 ஜி.பி.,க்கு, 3 ரூபாயாகவும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டாவது காரணம் தான் இன்னும் ஆழமானது.அலைபேசி நிறுவனங்கள் அனைத்துமே தொலைதொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய லைசென்ஸ் கட்டணங்களின் நிலுவை, இன்று, மென்னியைப் பிடிக்கும் அளவுக்கு ஆகிவிட்டன.சரிசெய்த மொத்த வருவாய் ஏ.ஜி.ஆர்., பற்றி போனவாரம்குறிப்பிட்டு இருந்தேன்.
தற்போது அதன் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது.அதாவது, அவர்கள் செலுத்த வேண்டிய லைசென்ஸ் தொகை ஒரு பங்கு என்றால், அதன் மீது போடப்பட்டுள்ள வட்டி, அபராதம், அபராதத்துக்கு வட்டி ஆகியவை குட்டி மேல் குட்டி போட்டு, பூதாகாரமாக பெருத்துள்ளன. இத்தொகையை மூன்று மாதங்களுள் செலுத்த வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு.வெள்ளிக்கிழமை அன்று அலைபேசி நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டிருக்கின்றன. ஏ.ஜி.ஆர்., கணக்கீட்டில் உள்ள வட்டி, அபராதம், அபராதத்துக்கு வட்டி ஆகியவற்றில் திருத்தங்கள் வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
பாதிப்புகள்
அலைக்கற்றைக் கட்டணங்களை அலைபேசி நிறுவனங்கள் செலுத்துவதற்கு, மத்திய அரசு, இரண்டாண்டுகள் அவகாசம் கொடுத்திருப்பது ஒரு நல்ல முன்னேற்றம். ஆனால், ஏ.ஜி.ஆர்., சம்பந்தமான வட்டி, அபராதம் போன்ற உபரிகளின் விஷயத்தில், அரசாங்கம் இன்னும் ஏதும் முடிவு எடுத்தாற் போல் தெரியவில்லை.இது முனைதெரியாத சிடுக்கு. எங்கே கைவைத்தாலும், மேன்மேலும் சிக்கலாகவே போகிறது.ஏ.ஜி.ஆர்., நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றால், அலைபேசி நிறுவனங்களிடம் பணம் இல்லை. அதனால், அவை சென்ற காலாண்டு முடிவுகளிலேயே நஷ்டத்தைக் காண்பித்துவிட்டன.கூடவே, அந்தக் கட்டணத்துக்கான சுமையை மக்கள் தலைமீது ஏற்றவும் முடிவு செய்துவிட்டன. அதனால் தான், டிசம்பர் முதல் அலைபேசிக் கட்டணங்கள் உயரவிருக்கின்றன.அலைபேசியும் இணையமும் தற்போது, பெட்ரோல், டீசல் மாதிரி அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டன. ஜியோ வந்த பிறகு, டேட்டா விஷயத்தில் புரட்சியே ஏற்பட்டுவிட்டது. டிஜிட்டல் இந்தியா கனவு கொடிகட்டிப் பறக்கிறது.எல்லோரும் ஏதேனும் வீடியோவைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலான வங்கிகள், மொபைல் வங்கிச் செயலிகளை உருவாக்கி, பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தியுள்ளன. பேடிஎம் போன்ற பணப் பரிமாற்றச் சேவைகளும் சுலபமாகியுள்ளன.கடந்த நான்கு ஆண்டுகளில், இணையப் பயன்பாடு பல்கிப் பெருகி, அனைத்துச் சேவைகளையும் விரல்நுனியில் பெற முடிந்துள்ளது.
இதற்கு அடிப்படை காரணம் அலைபேசி நிறுவனங்களின் குறைந்த கட்டணமே.பெட்ரோல், டீசல் விலைஉயர்ந்தால், எப்படி அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றனவோ, அதேபோல் இனிமேல் வாய்ஸ் மற்றும் டேட்டா கட்டண உயர்வுக்கும் குரல் கொடுக்க வேண்டி வரலாம்.தனியார் அலைபேசி சேவைகள் தான் இந்தியாவை இயங்க வைத்துக்கொண்டிருக்கின்றன. இங்கே விலையேறினால், மற்ற சேவைகள், பரிவர்த்தனைகள் அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும். இல்லாதவர்களையும் இருப்பவர்களையும் ஒருங்கிணைக்கும் புள்ளியாகத் திகழும் அலைபேசிகள், மீண்டும் செல்வந்தர்களுக்கு மட்டுமேயான கருவியாக மாறிவிடலாம்.கட்டணங்கள் உயர, உயர, சமூகத்தில் ஒரு பிரிவினர், விடுபட்டுப் போய்விடுவர். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகிவிடும்.இரண்டு அம்சங்கள்அரசாங்கத்தைப் பணியவைப்பதற்காக, அலைபேசி நிறுவனங்கள், கட்டணங்களை உயர்த்தி, மக்களை பயமுறுத்துகின்றனவா என்ற கேள்வி எழாமல் இல்லை. இருக்கலாம். மறுப்பதற்கு இல்லை.
ஆனால், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியே இங்கே பிரதானம். எப்படி இருந்தாலும், அலைபேசி நிறுவனங்கள் கட்டணங்களைச் செலுத்தித்தான் ஆகவேண்டும். அவற்றைச் செலுத்துவதற்கு போதிய கால அவகாசமும், முடிந்தால் ஒருசில சலுகைகளும் கொடுக்கலாம்.தனியார் இல்லையென்றாலும், அரசாங்க அலைபேசி சேவைகள் உள்ளன என தைரியமாக இங்கே சொல்ல முடியாது. அதனால், தனியார் துறையைத் தட்டிக்கொடுத்து, அரவணைத்துச் செல்வதே, புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.-ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|