பதிவு செய்த நாள்
17 டிச2019
06:34

மும்பை : நாட்டின் வளர்ச்சியில் மந்தநிலை இருப்பதை முன்பே அறிந்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது ரிசர்வ் வங்கி என, அதன் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:அரசும், ரிசர்வ் வங்கியும் சரியான நேரத்தில் செயல்பட்டுள்ளன. நாங்கள் சற்று முன்பாகவே செயல்பட்டு, வட்டி விகிதங்களை குறைப்பதில் ஈடுபட்டோம்.நாட்டின் வளர்ச்சியில் மந்தநிலை இருப்பதை, இந்த ஆண்டின் பிப்ரவரி மாதமே ரிசர்வ் வங்கி கண்டுகொண்டது. மந்தநிலைக்கான சூழல் ஏற்பட்டு வருவதை முன்பே கண்டு, தொடர்ந்து வட்டி விகிதங்களை குறைப்பதில் ஈடுபட்டோம்.
நாங்கள், பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வட்டி விகித குறைப்பு அறிவிப்பை வெளியிட்டோம். இந்த வட்டி குறைப்பு குறித்து, சந்தைகள் ஆச்சரியம் அடைந்தன.இதேபோல், தற்போது டிசம்பர் மாத கூட்டத்தில், வட்டி விகிதத்தை குறைக்காமல், அதே நிலை தொடரும் என அறிவித்தபோதும், சந்தை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தது.வட்டியை குறைத்த போதும், குறைக்காத போதும், சந்தை பங்கேற்பாளர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
தொடர்ந்து, நாங்கள் வட்டியை குறைத்து அறிவித்த முடிவு சரியானது என்று அனைவரும் பின்னர் ஏற்றுக்கொண்டதற்காக நான் மகிழ்ச்சி அடைந்தேன்; அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மாநிலங்கள்இந்த முறையும் நிதிக் கொள்கை குழு, வட்டியை குறைக்காமல் இருந்த முடிவு சரியானது தான் என்பதை ஏற்றுக்கொள்வர். அதை நிரூபிக்கும் வகையில் நிகழ்வுகள் வெளிப்படும் என நான் நம்புகிறேன்.
வளர்ச்சியில் மந்தநிலை, பணவீக்கம் அதிகரிப்பு, வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் ஆரோக்கியம் ஆகியவை குறித்து தேவையானவற்றை ரிசர்வ் வங்கி செய்யும்.வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மத்திய – மாநில அரசுகளின் உட்கட்டமைப்பில் கூடுதல் முதலீடுகள் முக்கியம். குறிப்பாக, மாநிலங்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக செய்ய வேண்டும்.மாநிலங்களின் மூலதன செலவினங்களை பொறுத்தவரை, பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.6 முதல், 2.7 சதவீதம் என்ற அளவில் மட்டுமே தொடர்கிறது.
வளர்ச்சியை அதிகரிப்பதற்கு, உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க, உலகளாவிய வினியோக சங்கிலியுடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்.புத்துயிர்கடந்த வாரம், நிதிக் கொள்கை நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு முன், 1,539 உற்பத்தி ஆலைகளில் ஓர் ஆய்வை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. அதில், முதலீட்டு சுழற்சியில் புத்துயிர் ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிகின்றன.
அந்த ஆய்வில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், தங்களிடம் உள்ள நிதியில், 45 சதவீதத்தை, நிலையான சொத்துக்களுக்காக வைத்திருப்பது தெரிய வந்தது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 18.9 சதவீதமாக இருந்தது.கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் இருப்பு நிலை குறைப்புக்கான தெளிவான செயல்முறை காணப்படுகிறது.
இது, எதிர்காலத்தில் அதிக வளர்ச்சி அடைய உதவும். எதிர்காலத்தில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இந்தியா, ஜவுளி மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.உலக பொருளாதாரத்தை பொறுத்தவரை, அனைத்து வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் குறித்த நேரத்தில் ஒருங்கிணைந்து, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|