பதிவு செய்த நாள்
04 பிப்2020
17:11

கற்பனை தான் ஆடை வடிவமைப்பாக மலர்கிறது. கற்பனைக்கு எல்லையேது! முன்பெல்லாம், வர்த்தகர்கள் தரும், ஆடை வடிவமைப்பின் அடிப்படையிலேயே, ஏற்றுமதி ஆர்டர்களை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் முடித்துக்கொடுக்க வேண்டியிருந்தது.இப்போதோ, பேஷன் உலகு, மாறிக்கொண்டே இருக்கிறது. எந்தக் கற்பனை வெல்லும் என்று யாருக்குத் தெரியும்! ஏற்றுமதியாளர்களே, ஆடை வடிவமைப்புகளை உருவாக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆடையாக தைக்காமல், மெய்நிகர் தொழில்நுட்பத்தில், கற்பனை ஆடை உருவாகிறது. வர்த்தகர்களை ஈர்க்கும்போது, அது ஆர்டராக மாறுகிறது. பின், நிஜ ஆடைகள் உருவெடுக்கின்றன.இருப்பினும், ஆடைகளை சுயமாக வடிவமைத்து, ஆர்டர் பெறும் முறை, இன்னும் அதிகரிக்கவில்லை. இதற்குக் காரணம், இதற்குரிய கட்டமைப்பு, திருப்பூரில் போதுமானதாக இல்லை என்பதுதான்.
மத்திய சிறு, குறு நிறுவனங்கள் துறையின் நிலைக்குழு, திருப்பூரில், 41 பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் இணைந்து, ஆடை டிசைன் ஸ்டுடியோ அமைக்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதற்கான திட்ட மதிப்பீடு 15 கோடி ரூபாய். முதலிபாளையம் ‘நிப்ட் டீ’ கல்லுாரி வளாகத்தில், இதற்கென இரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. டிசைன் உருவாக்கும் அரங்கு, மல்டி மீடியா லேப், பேஷன் ேஷா, வர்த்தக அரங்குகள் என அனைத்து அம்சங்களும், சர்வதேசத்தரத்துடன் இதில் இடம் பெற்றிருக்கும். ஓராண்டுக்குள், இது செயல்பாட்டுக்கு வரும். இதற்கு மத்திய அரசு 67 சதவீதம், மாநில அரசு10 சதவீதத்தை மானியமாக வழங்கும்.
என்ன நன்மை!பேஷன் உலகின், கற்பனை மிகுதி; கோடை, குளிர், இளவேனில் என்று காலநிலை மாறும்போதெல்லாம், ஆடை வடிவமைப்புகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. பேஷன் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஓரிரண்டு ஆண்டுக்கு முன்பிருந்தே, எதிர்காலத்திற்கான ஆடை வடிவமைப்பு கணிப்புகள் துவங்கிவிடும். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என, வடிவமைப்புக்கான சிந்தனைகள், ஓய்ந்துபோகாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆடை வர்த்தகத்தில், வெற்றிக்கொடி நாட்டுபவர்கள், பேஷன் குறித்த கணிப்புகளைக் கரைத்துக் குடித்திருந்தால்தான், மனதில் தோன்றியதை, ஆடை வடிவமைப்பாக மாற்றிக்காட்ட முடியும்!
திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு, ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. இந்த நாடுகளில் பேஷன் என்பது குறுகிய காலத்திற்குள் மாறக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு சீசனில் பிரபலமாகும் ஆடைகளை ஏற்றுமதியாளர்கள், பேஷன் போர்காஸ்ட்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபடுவதன் மூலம், பேஷனைக் கணிக்கும் மையமாக திருப்பூரே மாற முடியும். மேலும், வழக்கமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் மட்டும் அல்லாமல், வேறு நாடுகளுக்கும், புதிய ஆடை வடிவமைப்புகளை அனுப்பி, உடனுக்குடன் ஆர்டர் பெற முடியும்.
சிறிய ஆடை எண்ணிக்கையில், அல்லாமல், பெரிய ஆடை எண்ணிக்கையிலான ஆர்டர்களையும், மதிப்புக்கூட்டப்பட்ட ஆடைகளுக்கான ஆர்டர்களையும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், எதிர்காலத்தில் பெறுவதற்கு, ஆடை டிசைன் ஸ்டுடியோ, அடித்தளமாக அமையும்.ஏற்றுமதி இலக்கை அடைவதில், ஏற்றுமதியாளர்கள் சிரமப்படுகின்றனர். இதைப் போக்குவதற்கான வாய்ப்பாகவும், இது இருக்கும்.
பேஷன் போர்காஸ்ட்திருப்பூரில் ‘பேஷன் போர்காஸ்ட்’ கருத்தரங்குகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. மேற்கு லண்டனைத் தலைமையிடமாக கொண்டுசெயல்படும் டபிள்யூ.ஜி.எஸ்.என்., நிறுவனம், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் இணைந்து, திருப்பூர் திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில், வரும் மார்ச் 1ம் தேதி ‘பேஷன் போர்காஸ்ட்’ கருத்தரங்கை நடத்துகின்றன.இந்த வாய்ப்பை ஏற்றுமதியாளர்கள், ஆடை டிசைனர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|