பதிவு செய்த நாள்
04 பிப்2020
17:17

மத்திய பட்ஜெட்டில் தொழில் துறைக்கு, 27 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்ப் செட்கள்; 15 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் சக்தி மூலம் பம்ப் செட்களுக்கு மின்சாரம் வழங்குவது; சுகாதாரமான குடிநீருக்கென, ‘ஜலசக்தி அபியான்’ திட்டத்துக்கு, 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, போன்றவை, ‘பம்ப் செட்’ தொழிலுக்கு உத்வேகம் அளிக்கிறது.
மேலும், சிறு தொழில் உற்பத்தியாளர்களுக்கான வரித்தணிக்கை அளவு ஆண்டுக்கு, ஒரு கோடியில் இருந்து, 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 1,000 கோடி ரூபாய் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி, எம்.எஸ்.எம்.இ.,க்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், திறன் மேம்பாட்டுக்கென, 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் தொழில் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சரியான திட்டமிடலுடன், முழுமைப்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
குறு, சிறு பம்ப் செட் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:மத்திய பட்ஜெட்டில், 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்ப் செட்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம். மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் வழிகாட்டுதலின்படியே சோலார் பம்ப் செட்கள் தயாரிப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் இடம்பெறுகின்றன.இதற்கான டெண்டர்களில் பங்கேற்க, ‘சோலார் இன்ஸ்டலேசன்’, ஆண்டு வருமானம் உள்ளிட்ட விதிமுறைகள் கடுமையாக உள்ளன. இந்த விதிமுறைகளால் குறு, சிறு பம்ப் செட் உற்பத்தியாளர்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது.
ஆனால், ‘பம்ப் – கன்ட்ரோலர் – பேனல்’ உள்ளிட்டவற்றை தனித்தனியே வாங்கி சோலார் பம்ப் தயாரிப்போர் டெண்டர்களில் எளிதில் பயனடைகின்றனர். பம்ப் செட் உற்பத்தியில் பல ஆண்டுகள் அனுபவம் மற்றும் திறமை மிக்க குறு, சிறு தொழில் முனைவோர் இதனால் ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.டெண்டரில் பங்குபெற எம்.எஸ்.எம்.இ.,க்கு, 20 சதவீதம் வரை ஒதுக்கீடுகள் இருந்தும் கடுமையான விதிமுறைகளால் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட முடிவதில்லை. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 300 சிறு, குறு பம்ப் செட் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், டெண்டரில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை தளர்த்தினால் மிகவும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் சரியான திட்டமிடல் இல்லாததால் முழுமை பெறுவதில்லை. எனவே, அனைத்து தரப்பினரும் பயன்பெற ஏதுவாக திட்டங்களை முழுமைப்படுத்த தாமதமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|