பதிவு செய்த நாள்
04 ஜூலை2020
22:37

புதுடில்லி:கடந்த ஏப்ரல், மே ஆகிய மாதங்களில், தங்க இறக்குமதி, 597.51 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில், முக்கிய பங்கு வகிக்கும் தங்க இறக்குமதி, நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதங்களான, ஏப்ரல், மே மாதங்களில் சரிவைக் கண்டுள்ளது.தொற்றுநோய் பரவலை அடுத்து, தங்கத்தின் தேவை கணிசமாக குறைந்ததால், இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டில், இதே மாதங்களில், தங்க இறக்குமதி, 66 ஆயிரத்து, 63 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இந்த சரிவு, இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையேயான வேறுபாடான, வர்த்தக பற்றாக்குறையை, 74 ஆயிரத்து, 821 கோடி ரூபாயாக குறைக்க உதவி உள்ளது. நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், 2.32 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு காலத்தில், வர்த்தக பற்றாக்குறை கணிசமாக குறைந்ததை அடுத்து, நாட்டின் நடப்புக் கணக்கு உபரி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 4,530 கோடி ரூபாய் அதிகரிக்க காரணமாக அமைந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.1 சதவீதம்.இதுவே, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 34 ஆயிரத்து, 730 கோடி ரூபாயாக, அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.7 சதவீதமாக இருந்ததாக, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே, நாட்டின் தங்க இறக்குமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. மார்ச் மாதத்தில், 62.6 சதவீதமாகவும்; ஏப்ரலில், 99.93 சதவீதமாகவும்; மே மாதத்தில், 98.4 சதவீதமாகவும் இருந்தது.உலகில், அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஆண்டுக்கு, 800 முதல், 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|