பதிவு செய்த நாள்
25 அக்2020
21:20

பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. எங்கு திரும்பினாலும் தள்ளுபடிகள், ஆபர்கள், இலவசங்கள் என்று சந்தை, களை கட்டியுள்ளது. இந்த நற்காலத்தை எப்படி நாம் பொற்காலமாக மாற்றிக்கொள்ள முடியும்?
கொரோனா கொள்ளைநோய், ஆறு மாதங்களாக நம்மை வீட்டிலேயே கட்டிப் போட்டிருந்தது.தேவையான பல பொருட்களைக் கூட வாங்காமல் ஒத்திப் போட்டுக்கொண்டு இருந்தோம். தற்போது கொஞ்சம் அச்சம் நீங்கி, அத்தியாவசியப் பொருட்களையேனும் வாங்குவோம் என்று வெளியே வரத் தொடங்கியிருக்கிறோம்.
வாய்ப்புகள்
இந்தச் சமயத்தில் தான் மத்திய அரசு போனசும், எல்.டி.சி., சலுகையும், 10 ஆயிரம் ரூபாய் சம்பள அட்வான்சும் கொடுத்துள்ளது. சரியாக இந்த நேரம், பண்டிகைக் காலமாகவும் அமைந்துவிட்டது. வரிசையாக ஒவ்வொரு வணிக நிறுவனமும், நம்மை ஈர்க்க ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன. நேரடியாக கடைக்குப்போவதென்றாலும் சரி, இணையம் வழியாக வாங்குவது என்றாலும் சரி, வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இப்போது வாடிக்கையாளர்களான நாம் தான் கூடுதல் கவனத்தோடு இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தரம், சேமிப்பு, முதலீடு ஆகியவை தான் உங்களை வழிநடத்த வேண்டும்.ஆடைகளும், செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களும், வீட்டு உபயோகப் பொருட்களும் தான் பெருமளவு வாங்கப்படும். பல கடைக்காரர்கள் ஏராளமான சரக்குகளைச் சேமித்து வைத்துள்ளனர். 70 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி தருவதாகவும் பல நிறுவனங்கள் அறிவிக்கின்றன.
இது உண்மையா? பெரும்பாலும் இல்லை. உங்களை அந்தக் கடைக்கோ, வலைதளத்துக்கோ வரவழைக்க மேற்கொள்ளப்படும் உத்தி இது.
கவனமாக இருங்கள்
நீங்கள் விரும்பும் பொருட்கள், அந்த தள்ளுபடியில் கிடைக்காது. ஆனால், சராசரியாக, 25 முதல் 30 சதவீத தள்ளுபடியில் பொருட்கள் கிடைக்க வாய்ப்புண்டு. அதனால், பெரும் எதிர்பார்ப்போடு கடைகளுக்குப் போகவேண்டாம். நீங்கள் என்ன வாங்க விரும்புகிறீர்களோ, அதன் விலையைத் தொடர்ச்சியாக கவனித்து வாருங்கள்.
கடந்த ஆண்டு, கடந்த மாதம் வரை சந்தையில் அது என்ன விலையில் விற்பனை ஆயிற்று என்று கவனியுங்கள். தற்போது, பண்டிகைக் காலத்தில் என்ன விலையில் விற்கப்படுகிறது என்றும் பாருங்கள். உண்மையிலேயே விலை குறைந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வாங்குவது நல்லது.எப்படி இருந்தாலும், நீங்கள் வாங்க விரும்பும் பொருள் கூடுதல் தள்ளுபடியில் கிடைத்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. ஆனால், வழக்கத்தைவிட, கால் பங்கேனும் குறைவான விலையில் கிடைக்கிறதே என்று திருப்தியடையுங்கள்.
கூடுதல் தள்ளுபடியில் கிடைக்கும் பொருட்கள் பெரும்பாலும் பழைய சரக்காக இருக்க வாய்ப்புண்டு என்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். இணையத்தில் வாங்குவதென்றால், பிராண்டட் நிறுவனங்களின் பொருட்களாக வாங்குங்கள். தரத்துக்கான உத்தரவாதம் முக்கியம்.தீபாவளி சமயத்தில் பொட்டுத் தங்கமாவது வாங்க வேண்டும் என்று கருதும் பல குடும்பங்கள்உண்டு. இன்றைக்கு தங்கம் விற்கும் விலையில், ஆபரணமாக வாங்க வேண்டுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்.
லாபம் பார்க்க முயற்சி
மாறாக, தங்கத்தை அடிப்படையாக கொண்ட மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம். உங்கள் மொத்த சேமிப்பில், 10 முதல் 15 சதவீதத்தும், தங்கத்தில் முதலீடாகவோ, ஆபரணமாகவோ வைத்துக் கொள்ளலாம்.தீபாவளியின் போது, பங்குச் சந்தையில் முதலீடு செய்யக்கூடியவர்களும் உண்டு. நவம்பர் ஆரம்பத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல். டொனால்டு டிரம்பா, ஜோ பைடனா என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது.
இதனால், பங்குச் சந்தையில் வீழ்ச்சி நிச்சயம் என்று ஆருடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள், பங்குச் சந்தை பண்டிட்கள். அவர்கள் வாக்கு பலிக்குமேயானால், நல்ல முதலீட்டு வாய்ப்பு கனியலாம். பங்குச் சந்தையில் போதிய நேரம் செலவிட முடியாது என்று கருதுகிறவர்கள், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து, லாபம் பார்க்க முயற்சி செய்யலாம்.
பண்டிகைக் கால போட்டியில், இம்முறை ரியல் எஸ்டேட் துறையும் களத்தில் குதித்திருக்கிறது. ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி, அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நீங்கள் முதல்முறை வீடு வாங்கப் போகிறீர்கள் என்றால், துணிந்து இறங்குங்கள். மாறாக, இதை ஒரு முதலீடாக கருதுவீர்கள் என்றால், நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.
கடந்த பத்தாண்டில், வீடுகளின் மதிப்பு உயரவே இல்லை. கட்டி முடிக்கப்படும் நிலையில் இருக்கும் வீடுகளை வாங்குவது புத்திசாலித்தனம்.பெரும்பாலோர் இந்தச் சமயத்தில் தான் கிரெடிட் கார்டை பயன்படுத்துவீர்கள். பல வங்கிகள், கேஷ்பேக், வட்டிக் குறைப்பு, மாதாந்திர தவணையாக மாற்றிக்கொள்ளும் வசதி ஆகியவற்றை தற்போது வழங்கியுள்ளன.
உச்சவரம்பு
இவை ஒவ்வொன்றையும் கவனமாகப் பயன்படுத்துங்கள். ‘நோ காஸ்ட்’ இ.எம்.ஐ., என்றொரு திட்டம் பல இடங்களில் உண்டு. பொருளின் விலையை அப்படியே மாதாந்திர தவணைத் தொகையாக மாற்றித் தருவதாக அர்த்தம். அப்படி இருக்க வாய்ப்பில்லை. அதற்குள் வட்டித் தொகையும் பிராசசிங் கட்டணமும் உண்டு. அதனால், பல்வேறு வங்கிகள் தரும் இத்தகைய, ‘நோ காஸ்ட்’ இ.எம்.ஐ., திட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்து, எது உங்களுக்கு லாபகரமாக இருக்கிறதோ, அதைப் பயன்படுத்துங்கள்.
‘கேஷ்பேக்’ இன்னொரு சுவாரசியமான அம்சம். நீங்கள் வாங்கும் பொருளின் விலைக்கேற்ப, 10 சதவீதம் பணம் திரும்பத் தரப்படும் என்று சொல்லப்படும். இதில் இரண்டு அம்சங்களைக் கவனியுங்கள். அதில், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கேஷ்பேக் கிடையாது என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அதேபோல், எத்தனை மாதம் கழித்து அத்தொகை வழங்கப்படுகிறது என்றும் பாருங்கள்.
அது, உங்கள் வங்கிக்கணக்கில் மீண்டும் திரும்பத் தரப்படுகிறதா, அல்லது அவர்களுடைய வேலட்டில் சேமிக்கப்படுகிறதா என்றும் பாருங்கள். அதாவது, மீண்டும் அவர்களிடம் பொருட்களை வாங்கினால் தான் இந்த, கேஷ்பேக் தொகையைப் பயன்படுத்த முடியும்.இந்தக் கொரோனா பண்டிகைக் காலம் உண்மையிலேயே சுவாரசியமானது. நீங்கள் செய்யப் போகும் செலவுதான் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பயன்படப் போகிறது. அதேசமயம், உங்கள் வீட்டின் கடன் சுமையும் உயராமல் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை.
ஆர்.வெங்கடேஷ்p
attamvenkatesh@gmail.com
9841053881
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|