பதிவு செய்த நாள்
31 ஜன2021
21:12

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் ஆகவிருக்கிறது. கொரோனா பாதிப்புகளுக்குப் பிந்தைய முதல் பட்ஜெட். பெருந்தொழில்கள் முதல் சிறு தொழில்கள் வரை, ஒவ்வோர் அமைப்பும் தம் எதிர்பார்ப்புகளை, நிதி அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளன.
பல்வேறு ஊடகங்களிலும் அவை ஒலித்துள்ளன. குரலற்றவர்களின் குரல் என்ன? ஏழை, எளிய, மத்தியமர்கள் இந்த மத்திய பட்ஜெட்டில் இருந்து என்ன எதிர்பார்க்கின்றனர்?எண்கள், புள்ளிவிபரங்கள், வரைபடங்கள் எல்லாம் யோசனைகள், செயல்முறைகள், திட்டங்கள். ஆனால், மத்தியமர்கள் எதிர்பார்ப்பது விளைவுகளை மட்டுமே.அதுவும், கொரோனா என்ற கொள்ளை நோய், ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இழப்புகளை ஏற்படுத்தி, நம்பிக்கையைத் துண்டாடிவிட்டது.
இப்போது தேவை மீட்சி, நிம்மதிப் பெருமூச்சு, ஒளிக்கீற்று.கொரோனா, வேலைவாய்ப்பு களைப் பறித்தது, சம்பளத்தைக் குறைத்தது. கடந்த ஜூலைக்குப் பின் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும், பலர் வேலையின்றித் தான் தவிக்கின்றனர். டிசம்பர் மாதத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, அதிகபட்ச வேலையிழப்பைச் சந்தித்தவர்கள், 40 வயதுகுட்பட்டவர்கள் தான்.
கொரோனா காலத்தில், முறையான பணிகளில் வேலை இழந்த, 1.47 கோடி பேரில், 95 லட்சம் பேர் இளைஞர்கள். இவர்கள் பெரும்பாலும் நகரப் பகுதிகளைச் சேர்ந்தவர்.குறிப்பாக பெண்கள் என்று தெரிவிக்கிறது, சி.எம்.ஐ.இ., என்ற அமைப்பு.வேக வேகமாக ஓடிக்கொண்டு இருந்த பொருளாதார ஆற்று வெள்ளத்தில், அக்கம்பக்கத்து குட்டைகளும் குளங்களும், வாய்க்கால்களும் நிரம்பியிருந்தன.
வெள்ளமே முடங்கிப் போன பின், எல்லா நீர்நிலைகளும் வற்றி போய் கிடக்கின்றன. இன்றைக்குத் தேவை, வேலைவாய்ப்பு என்ற பெருவெள்ளம். நகரங்களில் உள்ள படித்தவர்கள் நிலையே இது தான் எனும்போது, ஏழை, எளியவர்கள் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டாம். நகர ஏழைகளுக்கு உடலுழைப்பு சார்ந்த வேலைகள் முடங்கிப் போனது, முடங்கிப் போனது தான்.ஊரகப் பகுதியில் உள்ள ஏழை, எளியோர் நிலைமையும் பெரிதாக முன்னேறவில்லை.
எப்படி கடந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை மாதங்களில், 100 நாள் வேலை திட்டத்துக்கு ஏராளமான பேர் திரும்பிப் போனார்களோ, அதேயளவுக்கு மீண்டும், டிசம்பர் மாதத்தில் வேலை தேவை அதிகரித்தது.ஆனால், இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 93.2 சதவீதம் காலியாகிவிட்டது. புதிதாக வேலை கோருபவர்களுக்கு வேலை தர முடியாத நிலைமை தான் தற்போது நிலவுகிறது.
விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்வது இன்னொரு முக்கிய பிரச்னை. சமையல் எரிவாயு கடந்த ஆண்டு, மே மாதம் சென்னையில், 569 ரூபாய்க்கு விற்றது, தற்போது 710 ரூபாய்க்கு விற்பனையாகிறது.திருநெல்வேலியிலோ விலை, 772 ரூபாய். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
கொரோனாவால் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால், கடந்த ஓராண்டில், ஒவ்வொரு மத்தியமர் வீட்டுச் செலவுகளும் குறைந்திருக்கும் என்று நீங்கள் கணக்குப் போட்டால், அது மிகப் பெரிய தவறு. குறைந்தபட்சம், 20 முதல் 30 சதவீத செலவுகள் பெருகியிருக்கின்றன.
பதினைந்து ரூபாய் விற்ற கீரைக்கட்டு, தற்போது 30 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சிறிய தேங்காயின் விலையோ, 25 ரூபாய். கொசுறாக கிடைத்த கொத்தமல்லி கட்டின் விலை, 25 ரூபாய்.அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு, மருத்துவச் செலவுகள் ஆகியவை, ‘பர்சை’ பதம் பார்த்துவிட்டன. இதில் பலருக்கு வேலையில், 30 சதவீத சம்பள வெட்டு வேறு.
திடீரென்று பூனை போல், ஏழ்மை உள்ளே நுழைந்துவிட்டது. சின்ன சின்ன சேமிப்புகளும் கரைந்து போய்விட்டன. புதிய வீடு, திருமணம், இதர சுப நிகழ்ச்சிகளையும் கொரோனாவால் அல்ல, செலவுகளுக்குப் பயந்தே, பலரும் ஒத்திவைக்க ஆரம்பித்துவிட்டனர். மருத்துவச் செலவுகளும், மரண வீட்டுச் செலவுகளும் தான் முன்னணியில் நின்றன.
இன்றைய பட்ஜெட், ஒன்றே ஒன்றைத் தான் மீட்டெடுக்க வேண்டும். அதற்குப் பெயர், சுபிட்ச உணர்வு. நல்லபடியாக நம்பிக்கையோடு வாழ முடியும், முன்னேற முடியும் என்ற, ‘டானிக்கை ’மட்டும் இந்த பட்ஜெட், ஏழை எளியவர்களுக்கு வழங்க முடிந்தால், அதுவே மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.செய்வீர்களா நிதி அமைச்சரே?செய்வீர்களா நிதி அமைச்சரே?
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
98410 53881
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|