பதிவு செய்த நாள்
04 ஏப்2021
22:31

எது நடக்கக்கூடாது என்று பயப்பட்டோமோ, அது கடைசியில் நடந்தேவிட்டது. 10 கோடி இந்திய பயனர்களின் தனிப்பட்ட விபரங்கள் இன்று இணையத்தில் அனாமத்தாக கிடைக்கின்றன. தகவல் பாதுகாப்பு எங்கே என்ற கேள்வி, அனைவர் மனதிலும் நிழலாடுகிறது.
‘மொபிகுவிக்’ என்பது ஒரு, ‘டிஜிட்டல் வாலட்’ நிறுவனம். உங்கள் அலைபேசியில் இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து பதிவு செய்துவிட்டால், பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். பொருட்கள் வாங்கலாம்.பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்தலாம். கையில் ‘மணி பர்ஸ்’ வைத்துக்கொள்வது போல், அலைபேசியில் இருக்கும் மணி பர்ஸ் இது. அவ்வப்போது பணத்தை மட்டும் இந்த வாலட்டில் நிரப்பிக்கொள்ள வேண்டும். எல்லாம் டிஜிட்டல். எல்லாம் இணையம் செய்யும் மாயம்.
தகவல்கள் கசிவு
கடந்த வாரம், ராஜசேகர் ரஜாரியா என்ற இணைய பாதுகாப்பு வல்லுனர், ஒரு செய்தியை வெளியிட்டார். மொபிகுவிக் செயலியில் பதிவு செய்து, அவர்களது சேவைகளைப் பயன்படுத்தும், 10 கோடி இந்திய பயனர்களின் விபரங்கள், ‘டார் வெப்’ எனும் ரகசிய இணைய தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது என்று சொன்னார்.அதுவும் மிகவும் சல்லிசான, 1.5 பிட் காயினுக்கு. அதாவது, 62 லட்சம் ரூபாய்க்கு இந்த மொத்த தரவுகளும் கிடைக்கின்றன.
இதில், பயனர்களின் பெயர், பான் எண், ஆதார் எண், மற்ற கே.ஓய்.சி., விபரங்கள் உள்ளன. அதாவது எதையெல்லாம் நாம் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டுமோ, அவையெல்லாம் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு, அத்தனை தில்லுமுல்லுகளையும் செய்ய முடியும்.
ராஜசேகரது குற்றச்சாட்டை, மொபிகுவிக் நிறுவனம் மறுத்தது. அப்படி எந்தவிதமான ஓட்டையும் எங்கள் டிஜிட்டல் சேவையில் இல்லை என்று சாதித்தது. ஆனால், இஸ்ரேல் நாட்டில் உள்ள மிக முக்கியமான இணைய பாதுகாப்பு நிறுவனம், மொபிகுவிக் பயனர் விபரங்கள் வெளியானது உண்மைதான் என்றது. இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாக இந்நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விபரம் கேட்டது.
மொபிகுவிக் குற்றச்சாட்டை மறுத்தது.பின்னர், பல்வேறு முக்கிய வல்லுனர்களும் தகவல் கசிவை உறுதிப்படுத்திய பின்னர், வேறு வழியில்லாமல், தடயவியல் தணிக்கை செய்து, விபரங்களைத் தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.இதையெல்லாம் படித்தவுடன், ‘நாம் கையில் ரொக்கமாக பணத்தை வைத்துக்கொள்வது தான் சிறந்தது, எதுக்கு இந்த டிஜிட்டல் விஷப்பரிட்சை’ என்று உடனே கற்காலத்துக்குப் போய்விடாதீர்கள்.
மேலும் காலச் சக்கரத்தை பின்னோக்கி நகர்த்தவும் முடியாது, அது பிற்போக்குத்தனமும் கூட.இன்னும் டிஜிட்டல் சேவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எப்படி என்று பார்ப்பது தான் சரியான அணுகுமுறை. இங்கே தான் ‘தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம்’ விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது
.நம்மைப் போன்ற சாதாரணர்கள், பெருநிறுவனங்களின் கைகளில், தெரிந்தோ தெரியாமலோ பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டு விடுகிறோம். அவர்கள் அவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வர் என்பது வெறும் நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையை அவர்கள் மீறும் போது, நமக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?
தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் இருக்குமேயானால், நிறுவனங்கள் பயப்படும். இதுபோன்ற ஒவ்வொரு தகவல் கசிவுக்கும் கடுமையான அபராதமும், தண்டனையும் கிடைக்கும். கூடுதல் கவனத்தோடு, எந்தவிதமான ஓட்டையும், கசிவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.அந்த நிலை தற்போது இல்லை எனும்போது, குறைந்தபட்சம் வெளிப்படைத் தன்மையாவது இருக்கவேண்டும். ‘ஆமாம், எங்கள் பாதுகாப்பு அரண்களையும் மீறி, பயனர்களான உங்களுடைய தகவல்கள் கசிந்துவிட்டன. உடனடியாக உங்கள் ‘பாஸ்வேர்டு’களையும், ‘பின்’ எண்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்’ என்றாவது இந்த நிறுவனம் சொல்லியிருக்க வேண்டும்.
நம்பிக்கை
அதன்மூலம், தனிநபர்கள் தங்கள் தகவல்களின் பாதுகாப்பை தாங்களே உறுதிப் படுத்திக்கொண்டு இருக்கமுடியும்.இதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால், இப்படிப்பட்ட தகவல் கசிவு ஏற்பட்டுள்ளது என்ற விபரத்தை வெளியுலகுக்குக் கொண்டுவந்த ராஜசேகர் ரஜாரியா மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன், அவர் ‘மீடியா மோகம்’ மிகுந்தவர் என்றெல்லாம் வசைபாடியது மொபிகுவிக் நிறுவனம்.தகவல் கசிந்தது தப்பில்லை, அதை எடுத்துச் சொன்னவர் தான் தப்பானவராம்! என்னே ‘லாஜிக்!’
டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தான் எதிர்காலம். அதன் பாதுகாப்பை தொடர்ந்து வலுப் படுத்துவதன் மூலமே, பல கோடி புதிய பயனர்கள் நம்பிக்கையோடு உபயோகபடுத்துவர். இதுபோன்ற தகவல் கசிவுகள், அவர்களை அச்சம் கொள்ளவே வைக்கும். ரிசர்வ் வங்கி நம்பிக்கையை வளர்க்கவேண்டும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|